கோவை பேரூராட்சிகளில் நிதி ஒதுக்கீடு இல்லாததால் திட்ட பணிகள் முடக்கம்

கோவை, ஏப்.12: கோவை மாவட்டத்தில் பேரூராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு இல்லாத நிலையில் திட்ட பணிகள் முடங்கி கிடக்கிறது. கோவை மாவட்டத்தில் 37 பேரூராட்சிகள் உள்ளன. இதில், குடிநீர், தெரு மின்விளக்கு, திடக்கழிவு மேலாண்மை, ரோடு, சாக்கடை கால்வாய், மயானம் சீரமைப்பு, மழைநீர் வடிகால் அமைத்தல் போன்ற பணிகள் நடத்தப்பட வேண்டி உள்ளது. கடந்த ஆண்டில், பேரூராட்சிகளில் போதுமான அளவு வரி வசூல் நடக்கவில்லை. மாவட்ட அளவில், பேரூராட்சிகளில் 60 சதவீதம் அளவிற்கு மட்டுமே சொத்து வரி, குடிநீர் கட்டணம் வசூலிக்கப்பட்டது. வரி உயர்த்தப்பட்டதால் மக்கள் வரி செலுத்த மறுத்து விட்டனர். திட்ட பணிகள் எதுவும் நடக்காத அதிருப்தியில் ெபாதுமக்கள் பேரூராட்சி நிர்வாகங்களின் மீது கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அன்னூர், கருமத்தம்பட்டி, சூலூர், பேரூர் பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம் அறிவிப்புடன் முடங்கியது.

எட்டிமடை, செட்டிபாளையம், திருமலையம்பாளையம், இடிகரை, பள்ளபாளையம், சர்க்கார் சாமக்குளம், வெள்ளலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை அதிகமாகி விட்டது. குடிநீர் குழாய் சீரமைப்பு, போர்வெல் தண்ணீர் சப்ளை போதுமான அளவு நடக்கவில்லை. பல மாதங்களாக வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் பேரூராட்சிகளில் திட்ட பணிகளுக்கு டெண்டர் எதுவும் விடப்படவில்ைல. பேரூராட்சிகளில் கஜானா காலியாக இருப்பதாகவும், திட்ட பணிகளுக்கு செலவிட நிதியில்லாத நிலையிருப்பதாகவும் தெரிகிறது. அடிப்படை வசதிகளை கவனிக்க, செயல் அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள், பொறியாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. குடிநீர், அடிப்படை வசதிகள் நிறைவேற்ற நிர்வாக அதிகாரிகள் முன் வரவில்லை.

உள்ளாட்சிகளில் சொத்து வரி, குடிநீர் கட்டணம் மூலமாக பெரும்பாலான பணிகள் நடந்தன. வரி வசூல் நடப்பது முடங்கியதால் திட்ட பணிகளுக்கு செலவிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு திட்ட பணிகளுக்கு பேரூராட்சி நிர்வாகம் இன்னும் நிதி ஒதுக்கவில்லை. மாவட்ட அளவில் சுமார் 200 ேகாடி ரூபாய் வரை நிதி எதிர்பார்க்கப்படுகிறது. திட்ட பணிகள் வாரியாக நிதி ஒதுக்கீடு செய்தால் மட்டுமே அடிப்படை வசதிகளை செய்ய முடியும் என பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: