மாநகராட்சி பகுதிகளில் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம்

கோவை, ஏப்.12: கோவை மாநகராட்சி பகுதியில் மாஸ்க் அணியாத மற்றும் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காத நபர்களுக்கு நேற்று ஒரே நாளில் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. கோவை மாநகராட்சியில் கொரோனா பரவல் தடுக்க சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, பொது இடங்கள், பேருந்துகள், கடைகள், தொழில் நிறுவனங்கள், ஷாப்பிங் மால் ஆகியவற்றில் கொரோனா விதிகளை கடைபிடிக்காத நபர்கள், நிறுவனங்களை கண்டறிந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று கோவை மாநகராட்சி கமிஷனர் உக்கடம் பகுதியில் அதிரடி ஆய்வு நடத்தினார்.

அப்போது, பேருந்தில் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் பயணிகளை ஏற்றிய மற்றும் பேருந்தில் மாஸ்க் அணியாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கோவை வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு மற்றும் மத்திய மண்டலம் என மாநகராட்சியின் 5 மண்டலங்களில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் மாஸ்க் அணியாத 102 பேருக்கு ரூ.200 வீதம் மொத்தம் ரூ.20,400 அபராதம் விதிக்கப்பட்டது. தவிர, கொரோனா விதிகளை மீறிய கடைகளுக்கு ரூ.5,100 அபராதம் என மொத்தம் ரூ.25 ஆயிரத்து 500 அபராதமாக வசூலிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை தொடரும் எனவும், பொது மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் எனவும், கடைகளில் கொரோனா விதிமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: