கொரோனா தடுப்பு நடவடிக்கை மந்தம்

கோவை, ஏப்.12: கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் அலட்சியம் காட்டுவதால் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு காரணமாக நோய் தொற்று ஏற்படும் நபர்களின் எண்ணிக்கை 500ஐ கடந்து வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் கண் துடைப்பு நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் பிரசாரத்தின் போது அளவிற்கு அதிகமாக ஒரே இடத்தில் பலர் கூடிய போது எவ்வித அபராதமும் விதிக்காமல் இருந்த சுகாதாரத்துறையினர், தற்போது அபராதம் விதிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை.

குறிப்பாக, கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அவர்களின் வீடுகள், குடியிருப்பு பகுதிகளில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவில்லை. இதனால், பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. மேலும், இ-பாஸ் நடைமுறையை தீவிரப்படுத்தாமல் உள்ளனர். இதனால், கேரளாவில் இருந்து தினமும் பலர் கோவைக்கு வந்து செல்கின்றனர். நகர் மற்றும் ஊரக பகுதிகளில் அதிகாரிகள் கிருமி நாசினி தெளிப்பது, சுத்தம் செய்வது உள்ளிட்ட எவ்வித பணிகளிலும் முழு வீச்சில் ஈடுபடவில்லை. பெரிய, பெரிய நிறுவனங்களின் மீது அபராதம் விதிக்க தயக்கம் காட்டி வரும் அதிகாரிகள் சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் அபராதம் விதித்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதவிர, மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளும் தடுப்பு நடவடிக்கைகளில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.

பரிசோதனை கூடங்கள், சிகிச்சை மையங்கள், படுக்கை எண்ணிக்கை ஆகியவை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா நோயாளிகளை சிகிச்சை மையங்களுக்கு கொண்டு செல்ல தேவையான ஏற்பாடுகள் செய்யவில்லை. மாறாக, நோயாளிகளை அவர்களின் சொந்த வாகனங்களில் வந்து அட்மிட் செய்ய அறிவுறுத்தி வருகின்றனர். இதனால், கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நோயாளிகள் சொந்த வாகனங்களில் வந்து சிகிச்சை பெறுகின்றனர். மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், சுகாதாரத்துறை ஊழியர்கள், அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் கடந்த முறையை போல் கடும் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: