தக்காளி வரத்து அதிகரிப்பால் 2 கிலோ ரூ.15க்கு விற்பனை

ஈரோடு, ஏப்.12: ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் செயல்படும் தற்காலிக தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு தினமும் நாட்டு தக்காளி தாளவாடி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், ராயக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து வரத்தாகும். அதேபோல், பெங்களூர் தக்காளி கர்நாடகா மாநிலத்தில் இருந்தும், ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் வரத்தாகும். இந்நிலையில், நேற்று ஈரோடு மார்க்கெட்டிற்கு வெளிமாநில தக்காளியும், நாட்டு தக்காளியும் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன்காரணமாக, தக்காளி விலை சரிந்து, சில்லரை விலையிலேயே நேற்று 2 கிலோ ரூ.15க்கு விற்பனை செய்யப்பட்டது. தக்காளி விலை வீழ்ச்சியால், ஒரு கிலோ வாங்கிய மக்கள் நேற்று 2 கிலோ, 3 கிலோ தக்காளி வாங்கி சென்றதை காண முடிந்தது.

இதுகுறித்து தக்காளி வியாபாரி ஒருவர் கூறியதாவது:

நாட்டு தக்காளி, வெளிமாநில தக்காளியும் கடந்த ஒரு வாரமாக அதிகளவில் வரத்து உள்ளது. இதனால், கடந்த வாரம் 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.180க்கும், 10 கிலோ தக்காளி பெட்டி ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையானது. தக்காளி வரத்தின் காரணமாக மொத்த விலையிலேயே ஒரு பெட்டி ரூ.100க்கு கீழ் அதாவது ரூ.80, ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விலையில் ஒரு கிலோ ரூ.8க்கும், 2 கிலோ தக்காளி ரூ.15க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கோடை வெயில் சுட்டெரிக்க துவக்கி விட்டதால், அடுத்த மாதம் தக்காளி வரத்து குறைந்து விலை அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: