கொரோனா பரவல் எதிரொலி

திருச்சி, ஏப்.12: கொரோனா பரவல் எதிரொலியால் திருச்சியில் இருந்து புதுடெல்லி, மும்பை, கொச்சி, ஐதராபாத்துக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து துபாய், மலேசியா, சிங்கப்பூர், ஓமன், மஸ்கட் உள்ளிட்ட பல நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக திருச்சி விமான நிலையத்தில் இருந்து பன்னாட்டு விமான சேவை மற்றும் உள்நாட்டு விமான சேவை கடந்தாண்டு மார்ச் மாதம் நிறுத்தப்பட்டது. பின்னர் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டது. இதனால் உள்நாட்டு விமான சேவை துவங்கப்பட்டது. வெளிநாட்டில் சிக்கி தவித்த இந்தியர்களை மீட்க வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் உள்நாட்டு விமான சேவை முழுவதுமாக இன்னும் துவங்கப்படவில்லை. ஊரடங்குக்கு முன் திருச்சியில் இருந்து கொச்சி, பெங்களூரு, ஐதராபாத், மும்பை, புதுடெல்லி, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டன. தற்போது ஒரு சில நகரங்களுக்கு மட்டுமே விமானங்கள் இயக்கப்படுகின்றன. தற்போது கோடைகால அட்டவணைப்படி சென்னை மற்றும் பெங்களூரு தவிர மற்ற அனைத்து நகரங்களுக்கும் விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சியில் இருந்து பெங்களூருக்கு ஏற்கனவே காலையில் இயக்கப்பட்ட விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

புதிய அட்டவணைப்படி திருச்சியில் இருந்து சென்னைக்கு காலை 11.40 மணிக்கும், மதியம் 2.40 மணிக்கும், இரவு 9.35 மணிக்கும், பெங்களூருக்கு மாலை 6.25 மணிக்கும் விமானங்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நகரங்களுக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்த சேவையை பயன்படுத்தி வந்த பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

Related Stories: