நகைக்கடை பூட்டை உடைத்து 7 கிலோ வெள்ளி கொள்ளை

கெங்கவல்லி, ஏப்.12: சேலம் மாவட்டம், தலைவாசல் தாலுகா மும்முடி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முத்துராஜ்(34). இவர், கடந்த 8 மாதத்திற்கு முன்பு, மும்முடி பஸ் ஸ்டாப் பகுதியில் புதியதாக நகைக்கடை திறந்தார். நேற்று முன்தினம் இரவு, வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் கடையை பூட்டி சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அக்கம்- பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தலைவாசல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கடையின் உரிமையாளரான முத்துராஜூக்கு தகவல் அளித்தனர்.

உடனே, அவர் கடைக்கு வந்தார். கடையின் முன்பகுதி ஷட்டரால் உடைக்கப் பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, ஷோகேசில் வைக்கப்பட்டிருந்த ₹4 லட்சம் மதிப்பிலான 7 கிலோ வெள்ளி பொருட்களை  கொள்ளையர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. மேலும், கல்லாவில் இருந்த ₹5000, சிசிடிவி கேமரா புட்டேஜ் ஆகியவற்றை கொள்ளையர்கள் திருடி சென்றிருந்தனர். இதனிடையே, லாக்கரை உடைக்க முடியாததால், அதில் வைத்திருந்த 40 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் விட்டு சென்றுள்ளனர். இதையடுத்து, சேலத்தில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, துப்பு துலக்கப்பட்டது. மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து, தலைவாசல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: