சேலத்தில் 12 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டவை

சேலம், ஏப்.12: சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுக்கும் நிலையில் 12 இடங்கள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 1,763 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரே வீதியில் 3 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டால், அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை சுகாதார ஆய்வாளர்கள் கண்காணித்து வருகின்றனர். இதனிடையே, கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் அதிகரித்துள்ளது.இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ேலம் மாநகர் மற்றும் மாவட்டத்தில் 12 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 325 வீடுகளில் 1,763 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் இருப்பவர்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் இருந்தால், சுகாதாரத்துறை அலுவலர்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் காய்ச்சல் முகாம்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது, தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இதேபோல், அதிகளவில் கூட்டம் சேரும் பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதையும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Related Stories: