சருகுமலையில் காட்டு தீ

பரமத்திவேலூர், ஏப்.12: மோகனூரை அடுத்துள்ள அணியாபுரம் சருகுமலையில் ஏற்பட்ட காட்டுத் தீயில், சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் மரங்கள் எரிந்து நாமானது. நாமக்கல் மாவட்டம், மோகனூரை அடுத்துள்ள அணியபுரம் பகுதியிலிருந்து கால்நடை மருத்துவக்கல்லூரி வரை, சுமார் 1500க்கும் அதிகமான ஏக்கர் பரப்பில் மலைக்குன்றுகளாக சருகுமலை உள்ளது. இந்த மலையை, சுற்றியுள்ள கிராம மக்கள் ஆடு, மாடுகளை  மேய்ச்சலுக்கு அழைத்து சென்று வருகின்றனர். இந்நிலையில் மலைக்குன்று பகுதிகளில் புற்களும், ஏராளமான மரங்களும் வளர்ந்துள்ளது. கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், புற்கள் காய்ந்து சருகு போல் உள்ளது.

இந்நிலையில் நேற்று, அணியாபுரம் பகுதியில் உள்ள கோயில் அருகே மலையில் இருந்த காய்ந்த புற்களில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதில் மரங்களும் காய்ந்து இருந்ததால் தீ மளமளவென பரவியது. இதனை பார்த்த கிராம மக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முடியாமல் போகவே, நாமக்கல் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் உள்ள புற்கள் மற்றும் மரங்கள் தீயில் எரிந்து சாம்பலானது. வனத்துறை அலுவலர் அருள், வன குழு தலைவர் மணி, ஒன்றிய குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் அணியாபுரம் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் பிரபு ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

Related Stories: