அலங்காநத்தம் பிரிவு பகுதியில் நிழற்கூடங்கள் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

சேந்தமங்கலம், ஏப்.12: எருமப்பட்டி ஒன்றியம், அலங்காநத்தம் பிரிவு பகுதியில் இருந்து தினமும் ஏராளமான கூலி தொழிலாளர்கள் துறையூர், நாமக்கல் பாலப்பட்டி மண் கரடு தூசூர் கடக்கால் கரியபெருமாள் புதூர் உள்ளிட்ட 20 கிராமங்களில் இருந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அலங்காநத்தம் பிரிவு பஸ் நிறுத்தத்தில் இருந்து, பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். இங்கிருந்து நாமக்கல், சேந்தமங்கலம், துறையூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே, அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் வெகுநேரம் சாலையோரத்தில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மூன்று சாலைகள் சந்திப்பு பகுதியாக உள்ளதால், எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக நாமக்கல் செல்லும் சாலையில் நிழற்கூடம் ஒன்றும், சேந்தமங்கலம் செல்லும் சாலையில் ஒரு நிழற்கூடம் அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது கோடைகாலம் என்பதால் பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள், வெயிலின் தாக்கத்தால் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பகுதியில் நிழற்கூடம் அமைத்து கொடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: