மொரப்பூரில் துணிகரம் ஓய்வு பெற்ற எல்ஐசி அதிகாரி வீட்டில் 30 பவுன் கொள்ளை

தர்மபுரி, ஏப்.12: மொரப்பூரில் ஓய்வு பெற்ற எஸ்ஐசி மேலாளர் வீட்டில், 30 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் பூங்கா நகரை சேர்ந்தவர் கண்ணன்(65). இவர் எல்ஐசியில் மண்டல மேலாளராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த 7ம் தேதி, சேலத்தில் உள்ள தனது மகனை பார்ப்பதற்காக, மனைவி வள்ளி மற்றும் மகளுடன் சென்றுள்ளார். மீண்டும் நேற்று முன்தினம் மாலை, கண்ணன் மட்டும் மொரப்பூருக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது, அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் அலமாரி பூட்டு உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 30 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், ₹11,500 பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கண்ணன் மொரப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன் பேரில், இன்ஸ்பெக்டர் மஞ்சுளா, சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர். குடியிருப்புகள் அதிகமுள்ள பகுதியில் நடந்த இந்த கொள்ளை சம்பவம், அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: