யுகாதி பண்டிகையையொட்டி மாரண்டஅள்ளி சந்தையில் ₹1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பாலக்கோடு, ஏப்.12: மாரண்டஅள்ளி ஞாயிறு சந்தையில் தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி பண்டிகையை முன்னிட்டு ₹1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. தர்மபுரி மாவட்டம், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநில எல்லைப்பகுதிகளில் அமைந்துள்ளதால், தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்கள், தெலுங்கு வருட பிறப்பை யுகாதி திருநாளாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ஒவ்வொரு வருடமும் பாலக்கோடு, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில், யுகாதி திருவிழா வரும் 13ம் தேதி வெகு விமர்சையாக நடைபெறும். அந்த சமயத்தில் ஏராளமான ஆடுகள் பலியிட்டு வணங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற மாரண்டஅள்ளி ஞாயிறு சந்தையில், 1500க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அதில் 15 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ₹10ஆயிரம் முதல் ₹15ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. மாரண்டஅள்ளி அருகே பாலக்கோடு, மல்லாபுரம், சாமனுர் எம்.செட்டிஅள்ளி, சி.எம்.புதூர், பஞ்சப்பள்ளி, கெண்டேனஅள்ளி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாரண்டஅள்ளி சந்தைக்கு வந்து ஆடுகளை வாங்கி சென்றனர். நேற்று மதியம் 12 மணி வரை நடைபெற்ற சந்தையில், சுமார் ₹1கோடிக்கும் மேல் ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: