பென்னாகரம் வனப்பகுதியில் மான்களை வேட்டையாடிய 3பேர் கைது

பென்னாகரம், ஏப்.11: பென்னாகரம் அருகே வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியை கொண்டு இரண்டு புள்ளி மான்களை வேட்டையாடிய 3பேரை வனத்துறையினர் கைது செய்து, 2நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். பென்னாகரம் அருகே, முதுகம்பட்டி பகுதியில் மான்கள் வேட்டையாடப்படுவதாக, பென்னாகரம் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மசக்கல் காப்புக்காடு பேகியம் மாரியம்மன் கோயில் அருகே, வனப்பகுதியில் பென்னாகரம் வனச்சரக அலுவலர் முருகன் தலைமையில், வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அப்போது 4 பேர் கும்பல், நாட்டு துப்பாக்கியால் இரண்டு மான்களை வேட்டையாடியது தெரிய வந்தது. இதையடுத்து, வனத்துறையினர் அவர்களை மடக்கி பிடித்தனர். அப்போது ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.

அவர்களிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தியதில், அத்திமரத்தூரைச் சேர்ந்த ராமர்(50), ஏர்கோல்பட்டியை சேர்ந்த முருகன்(48), முத்தையன்(52) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் வேட்டையாடிய 2 மான்கள், வேட்டைக்கு பயன்படுத்திய 3நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். பின்னர், மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் உத்தரவின் பேரில், வனவிலங்கு வேட்டை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, 3பேரையும் பென்னாகரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர். தலைமறைவான மோகன் என்பவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Stories: