சிக்கன் கடை உரிமையாளரை கத்தியால் சரமாரியாக குத்திய 2 பேர் கைது விசாரணையில் திடுக் தகவல்கள்

புதுச்சேரி, ஏப். 12: புதுச்சேரி அரியாங்குப்பத்தில் சிக்கன் கடை உரிமையாளரை கத்தியால் சரமாரி குத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி அரியாங்குப்பம் வீராம்பட்டினம் பவானி நகரை சேர்ந்தவர் தென்னரசு (எ) சிலம்பரசன் (38). இவர் அரியாங்குப்பம் தர் நகர் முதலாவது குறுக்கு தெருவில் கோழி இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை சிலம்பரசன், தனது கடையில் வழக்கம்போல வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அரியாங்குப்பம் பர்கத் நகரை சேர்ந்த ஆனந்த் (33), அரியாங்குப்பம் கேப்சியம் வீதியை சேர்ந்த சுரேஷ் (35) ஆகிய 2 பேர் கடைக்கு வந்தனர். முன்விரோதம் காரணமாக சிலம்பரசனிடம் அவர்கள் தகராறில் ஈடுபட்டனர். அப்போது திடீரென அவர்கள் இருவரும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிலம்பரசனை சரமாரியாக குத்தினர். இதில் கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடனே ஆனந்த், சுரேஷ் ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிலம்பரசனை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்த புகாரின்பேரில் அரியாங்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார், கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே, தப்பியோடிய ஆனந்த், சுரேஷ் ஆகியோர் போலீசிடம் பிடிபட்டனர். அவர்களை கைது செய்து விசாரணை நடத்தியதில், கொலைவெறி தாக்குதலுக்கான காரணங்கள் குறித்து தெரியவந்தது. சிலம்பரசனும், ஆனந்தும் நண்பர்களாக பழகி வந்தனர். கடந்த 2019ல் சிலம்பரசனுக்கு, ஆனந்த் சுலப தவணை திட்டத்தில் செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால் அதற்கான ரூ.5 ஆயிரம் பணத்தை பலமுறை கேட்டும் ஆனந்துக்கு சிலம்பரசன் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதுபற்றி அறிந்த ஆனந்தின் அண்ணன் ஜெயசீலன், ஏண்டா என் தம்பிக்கு பணத்தை கொடுக்காமல் தகராறு செய்கிறாய்? என சிலம்பரசனை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிலம்பரசன், கத்தியால் ஜெயசீலனை குத்தியுள்ளார். இது 2019ல் நடந்தது. செல்போனுக்கு பணம் தராதது, அண்ணனை கத்தியால் குத்தியது உள்ளிட்ட காரணங்களால் சிலம்பரசன் மீது ஆனந்துக்கு தீராத பகை இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சிலம்பரசனிடம், ஆனந்த் தனது நண்பர் சுரேஷுடன் சென்று பணத்தை கேட்டுள்ளார். அப்போதும் பணத்தை தர முடியாது என சிலம்பரசன் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த் மற்றும் நண்பர் சுரேஷ் ஆகியோர் கத்தியால் சிலம்பரசனை சரமாரி குத்தியுள்ளனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>