சமூக இடைவெளியை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு சீல் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கடலூர், ஏப். 12: கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக போர்க்கால அடிப்படையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிப்பதை விரைவுபடுத்தவும், கொரோனா நோய் பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் தெரியவந்தால் அவர்களை உடனடியாக  கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என தெரிவித்தார்.

 கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களின் தொடர்பில் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டிலிருந்து வரும் நபர்களுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டால் அவர்களையும் உடனடியாக பரிசோதனைக்கு உட்படுத்தவும், ஒரே பகுதியில் மூன்றுக்கு மேற்பட்ட கொரோனா நோயாளிகள் இருந்தால் அப்பகுதியை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு செய்து, அப்பகுதியை தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும்.  இதனை வருவாய்த்துறை அலுவலர்களுடன் இணைந்து நோய் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை, காவல்துறை உட்பட சம்மந்தப்பட்ட துறையினர்  கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டது. கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், திட்டக்குடி, வேப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா பாதுகாப்பு மையத்தை, அனைத்து அடிப்படை வசதிகளுடன் செயல்பட, தயார் நிலையில் வைக்க சுகாதாரதுறைக்கு அறிவுறுத்தப்பட்டது.

  பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிந்து செல்வதை உறுதி செய்யவும், முகக்கவசம் அணியாமல் வரும் நபர்களிடம் அபராத தொகை வசூலித்து அதனை உரிய தலைப்பில் செலுத்தவும், சமூக இடைவெளியை பின்பற்றாத வணிக நிறுவணங்களுக்கு சீல் வைக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி) மகேந்திரன், இணை இயக்குநர் நலப்பணிகள் டாக்டர் ரமேஷ்பாபு, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் டாக்டர் செந்தில்குமார் உட்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: