செங்கல்பட்டு நீதிமன்றத்தில் லோக் அதாலத்தில் 487 வழக்குகள் தீர்வு: ₹12.30 கோடி நிவாரணம்

செங்கல்பட்டு, ஏப். 12: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மெகா லோக் அதாலத்தில் 487 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இதன்மூலம் ₹ 12.30 கோடி நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு உட்பட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்ப்பதற்கு மெகா லோக் அதாலத் நிகழ்ச்சி நேற்று முன்தினம் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றங்களில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆலந்தூர், தாம்பரம், பெரும்புதூர், உத்திரமேரூர், மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த மோட்டார் வாகன விபத்து, பராமரிப்பு, தொழிலாளர், நில சம்பந்தமான மற்றும் சிறு குற்ற வழக்குகள், விவாகரத்து என மொத்தம் 2,347 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

இதில், நேற்று முன் தினம் ஒரே நாளில் மட்டும் 487 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இதன்மூலம், ₹12 கோடியே 30 லட்சத்து 37 ஆயிரத்து 16 ரூபாய் நிவாரணத் தொகையாக வசூலிக்கப்பட்டு, உரியவர்களிடம் வழங்கப்பட்டது. செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்ற மெகா லோக் அதாலத்தில், செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், இலவச சட்ட மையத்தின் தலைவருமான நீதிபதி வசந்தலீலா பங்கேற்று துவக்கி வைத்தார். பின்னர் சம்பந்தப்பட்ட நிவாரணத் தொகைகளை வழங்கினார். இதில் இலவச சட்ட உதவி மைய செயலாளர் நீதிபதி உமாமகேஸ்வரி, நீதிபதி வேல்முருகன், வழக்கறிஞர்கள், இலவச சட்ட மைய உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி வசந்தலீலா, ‘‘செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் தேங்கியுள்ளது. இவ்வழக்குகளை சமரசத் தீர்வு மூலமாக முடிப்பதற்கு, வருடத்துக்கு ஒருமுறை மெகா லோக் அதாலத் நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்கள் நேரடியாக பேசி, தங்களுக்கான வழக்கை சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ளலாம். இதற்கு வழக்கறிஞர்களை நியமிக்கத் தேவையில்லை. இதில் முடிக்கப்படும் வழக்குகள் மேல்முறையீட்டுக்கு செல்ல முடியாது. இந்த லோக் அதாலத்தை பொதுமக்கள் பயன்படுத்தி, தங்களது வழக்குகளை உடனுக்குடன் தீர்த்துக் கொள்ளலாம்.’’ என  கூறினார்.

Related Stories: