மாமல்லபுரத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது

மால்லபுரம், ஏப். 12: மாமல்லபுரத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் கடந்த ஒரு வாரத்தில் ₹ 4 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) கணேஷ் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளதையொட்டி, மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதேபோல், மாமல்லபுரம் பேரூராட்சியிலும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பஸ் நிலையம், சுற்றுலா அலுவலகம், தொல்லியல் அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், மீன் மார்க்கெட் மற்றும் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், பொது இடங்களுக்கும், வணிக நிறுவனங்களும், கடைகளுக்கும் செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் தலைமையில் தீவிர ஆய்வு மேற்கொண்டு முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்றாத பொதுமக்கள், வியாபாரிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் கூறுகையில், ‘மாமல்லபுரம் பேரூராட்சி பகுதியில் கொரோனாவின் 2வது பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு கொரோனா தொற்றின் வீரியம் ஏற்கனவே தெரியும் என்றாலும், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும், மக்களிடமும் முகக்கவசம், சமூக இடைவெளி பின்பற்றுவதன் அவசியம் குறித்து எச்சரிக்கை விழிப்புணர்வு செய்து வருகிறோம். கடந்த ஒரு வாரத்தில் முகக்கவசம் அணியாத 20 நபர்களிடம் ₹ 4  ஆயிரம் அபராதம் வசூலித்துள்ளோம்.  பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும், வணிக நிறுவனங்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: