×

குப்பை, கழிவுநீரால் மாசடையும் புழல் ஏரி: கண்டு கொள்ளாத அதிகாரிகள்

ஆவடி, ஏப்.12: கொட்டப்படும் குப்பை கழிவுகள், கலக்கும் கழிவுநீரால் புழல் ஏரி தண்ணீரை பயன்படுத்தும் மக்கள் நோய் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் கைகட்டி வேடிக்கை பார்த்து வருகின்றனர் என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் புழல் ஏரியும் முக்கிய  பங்கு வகிக்கிறது. இதன் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கனஅடியாகும். 20.86 சதுர மைல் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியை  பொதுப்பணித்துறை பாராமரித்து வருகிறது. புழல் ஏரியின் கரை செங்குன்றம், புழல், சூரப்பட்டு, சண்முகபுரம், முருகாம்பேடு, கள்ளிக்குப்பம், பானுநகர், வெங்கடேஸ்வரா நகர் விரிவு, திருமுல்லைவாயல், அரிக்கம்பேடு, பொத்தூர் வரை நீண்டுள்ளது.

புழல் ஏரி தண்ணீரை புழல் மற்றும் கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிக்கப்படுகிறது. பின்னர், அங்கிருந்து  லாரிகள் மற்றும் குழாய்கள் மூலம் சென்னை மாநகர மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
இவ்வாறு சப்ளை செய்யப்படும் குடிநீரை பொதுமக்கள் சுட வைத்து குடிக்கலாம் என மாநகராட்சி நிர்வாகம் கூறுகிறது. ஆனால் அப்படிப்பட்ட குடிநீர் உற்பத்தியாகி வரும் புழல் ஏரியில் என்ன நடக்கிறது என்பதை பார்த்தால் நிச்சயம் சுட வைத்து குடிக்க கூட மனம் இடம் கொடுக்காது. அவ்வளவு தவறுகள் அங்கு நடந்து வருகிறது.  இது குறித்து, பொதுமக்கள் கூறுகையில், புழல் ஏரியை செங்குன்றம், அம்பத்தூர், புழல் ஆகிய பகுதிகளில்  கழிப்பிடமாக மாறியிருக்கிறது. மேலும், சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பலர் ஏரிக்கரையில் மலம், சிறுநீர் கழிக்கின்றனர். இவையெல்லாம் ஏரி நீரில் கலந்து விடுகிறது.

குறிப்பாக, ஏரியில் தண்ணீர் இருக்கும்போது கள்ளிக்குப்பம், முகாம்பேடு, சூரப்பட்டு, அரிக்கம்பேடு, லெட்சுமிபுரம் ஆகிய இடங்களில் உள்ள ஏரியில் நான்கு, இரண்டு சக்கர வாகனங்களை கழுவுவது, மாடுகளை குளிப்பாட்டுவது, துணி துவைப்பது மற்றும் குளிப்பது போன்ற செயல்கள் நடக்கின்றன. மேலும், அம்பத்தூர் பகுதியில் உள்ள ஒரகடம்,  வெங்கடேஸ்வரா நகர், பானு நகர், பழனிப்பா நகர், கிழக்கு பானு நகர், மேற்கு பானு நகர்  மற்றும்  திருமுல்லைவாயல் ஆகிய பகுதிகளில் இருந்து வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மழை நீர் கால்வாய் மூலம் ஏரியில் கொண்டு விடப்படுகிறது. மேலும், புழல் ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் ஏரியில் கலக்கின்றன. இப்படிப்பட்ட செயல்களால் ஏரி மாசடைந்து வருகிறது.

மேற்கண்ட தவறு ஒரு புறம் நடந்து கொண்டு இருக்கும் வேளையில் சமீப காலமாக கட்டிட இடிபாடுகள், இறைச்சி கழிவுகள், வீட்டு குப்பைகள், வெட்டிய தென்னை மரங்கள், இளநீர் ஓடுகள், கரும்பு கழிவுகள் உள்ளிட்டவைகளை புழல் ஏரியில் கொட்டப்பட்டு வருகின்றன. இவைகளை இரவில் மட்டுமல்லாமல், பகலிலும் கூட லாரிகள் மூலம் கொண்டு வந்து ஆவடி அருகே திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள புழல்  ஏரியின் ஒரு பகுதியில் மர்ம நபர்கள் கொட்டி வருகின்றனர்.
 இவ்வாறு, ஏரியில்  கழிவுகளை டன் கணக்கில் கொட்டி உள்ளனர். இதனால் ஏரி நீர் மாசடைவதுடன் விஷத்தன்மையாக மாறும் அபாயம் உள்ளது. இந்த தண்ணீரை குடிக்கும் சென்னை மக்களுக்கு பல்வேறு விதமான நோய்களால் அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு புகார் செய்து வருகின்றனர்.

இருந்த போதிலும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். இதனால் சமுக விரோதிகள் தொடர்ந்து கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனை அகற்ற அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். சமூக ஆர்வலர்கள் கூறுகையில், புழல் ஏரியில் கழிவுநீர் விடுதல், இறைச்சி கழிவுகள், வாகனங்களை கழுவுதல், துணி துவைத்து குளிப்பது, இயற்கை உபாதைகளை கழிப்பது போன்றவைகளால்  தண்ணீர் மாசடைந்து வருகிறது. இந்த தண்ணீரை சுத்திகரித்து கொடுத்தாலும் மக்களுக்கு பல விதமான உடல் உபாதைகளும் ஏற்பட்டு வருகின்றன. மேற்கண்ட செயல்களை தடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர் என்று கூறுகின்றனர்.

Tags :
× RELATED நடப்பு நவரை பருவத்தில் முதற்கட்டமாக 8...