பெட்ரோலுக்கு பணம் தர மறுத்ததால் லிப்ட் கேட்டு வந்தவர் அடித்து கொலை: பாலிடெக்னிக் மாணவன் கைது

பெரம்பூர்: பைக்கில் லிப்ட் கேட்டு வந்த நபர், பெட்ரோலுக்கு பணம் தராததால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கொளத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. சிசிடிவி காட்சி மூலம் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். கொளத்தூர் வளர்மதி நகர் 1வது தெருவில், கடந்த 4ம் தேதி அதிகாலை 5 மணிக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தலையில் ரத்த காயங்களுடன் ஒருவர் மயங்கி கிடந்தார். போலீசார், அவரை மீட்டு முதலுதவி அளித்தனர். ஆனாலும், அவருக்கு மயக்கம் தெளியாததால், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர், அவரை பரிசோதித்துவிட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், இறந்து கிடந்தவர் திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (49) என்பதும், இவர், கொளத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கட்டுமான வேலை செய்து வந்ததும் தெரிந்தது. மேலும், குடிபோதையில் அவர் மயங்கி விழுந்தபோது, தலையில் அடிபட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதினர். இருப்பினும் சந்தேகத்தின் பேரில், சம்பவம் நடந்த பகுதிக்கு அருகி உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஒவ்வொன்றாக ஆய்வு செய்தனர். அதில், சம்பவத்தன்று ஒரு வாலிபர் இருசக்கர வாகனத்தில் அந்த தெரு வழியாக பல முறை வந்து சென்றது பல கேமராக்களில் பதிவாகி இருந்தது. விசாரணையில், பைக்கை ஓட்டி வந்தவர் கொளத்தூர் அம்பேத்கர் நகர் 1வது தெருவை சேர்ந்த சசிகுமார் (19), என்பதும், இவர் கொளத்தூர் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வருவதும் தெரியவந்தது.

அவரை, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது, சங்கரை அடித்து கொன்றதாக கூறினார்.

இதுபற்றி போலீசார் கூறியதாவது: சம்பவத்தன்று சசிகுமார் வளர்மதி நகர் வழியாக பைக்கில் சென்றுள்ளார். அப்போது, சங்கர் அவரை நிறுத்தி லிப்ட் கேட்டுள்ளார். இதையடுத்து, சசிகுமார் அவரை தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு சிறிது தூரம் சென்றபோது, ‘நீங்கள் எங்கு போகவேண்டும் என்று கூறுங்கள். நான் உங்களை அந்த இடத்திற்கே கொண்டு சேர்த்து விடுகிறேன். ஆனால், பெட்ரோலுக்கு மட்டும் ரூ.100 கொடுத்து விடுங்கள்,’ எனக் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சங்கர், பைக்கை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கி உள்ளார். பின்னர், ‘என்னிடம் 100 ரூபாய் இருந்தால் நான் ஆட்டோவில் செல்ல மாட்டேனா. உன்னிடம் லிப்ட் கேட்டு ஏன் பைக்கில் வரப்போகிறேன். நான் நடந்தே செல்கிறேன். நீ போ,’ என கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சசிகுமார் தகாத வார்த்தைகளால் சங்கரை திட்டியுள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த சசிகுமார், சங்கர் கன்னத்தில் பளாரென்று ஒரு அறை விட்டு, கீழே தள்ளியுள்ளார. இதில் நிலைகுலைந்த சங்கர், கீழே விழுந்ததில் பின்தலையில் அடிபட்டு மயங்கியுள்ளார். இதையடுத்து, சசிகுமார் அங்கிருந்து சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து சசிகுமாருக்கு சந்தேகம் ஏற்படவே திரும்பி வந்து பார்த்துள்ளார். அப்போது சங்கர் அதே இடத்தில் விழுந்து கிடந்துள்ளார். 4 முறை பைக்கில் அங்குமிங்கும் சென்று வந்து பார்த்தபோதும், சங்கர் அங்கேயே கிடந்துள்ளார். இதனால், அச்சமடைந்து அங்கிருந்து சசிகுமார் சென்றுள்ளார். தலையில் காயம் ஏற்பட்டதில் சங்கர் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரிந்தது. இதையடுத்து, சசிகுமார் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: