×

முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக சென்னையில் 1,118 பேர் மீது வழக்கு: ரூ.2.12 லட்சம் அபராதம் வசூல்


சென்னை: சென்னையில் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக கடந்த 3 நாட்களில் 1,118 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.2,12,400 அபராதம் வசூலித்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அதாவது, வெளியில் செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், கூட்டமாக செல்ல கூடாது, சமூக இடைவெளியே கடைப்பிடிக்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை அரசு பிறப்பித்துள்ளது. மேலும், முகக்கவசம் அணியாமல் வெளியில் சென்றால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்றும், சமூக இடைவெளி கடைப்பிடிக்காவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அரசு உத்தரவை நடைமுறைப்படுத்தும் வகையில் சென்னை மாநகர காவல் எல்லையில் உள்ள சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து காவல் நிலையங்கள் என 196 காவல் நிலையங்கள் சார்பில், கடந்த 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடத்தப்பட்ட வாகன சோதனையில், முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 1,118 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதமாக ரூ.2,12,400 வசூலிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று முன்தினம் மட்டும் சென்னை முழுவதும் அதிகபட்சமாக 659 வழக்குகள் பதிவு செய்து, அபராதமாக ரூ.1,22,100 வசூலிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சமூக இடைவெளி இன்றி கூட்டமாக இருந்ததாக சென்னையில் 4 வழக்குகள் பதிவு செய்து, அபராதமாக ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...