தேயிலை தொழிற்சாலைகளுக்கே நேரில் சென்று 23,483 தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட திட்டம்

ஊட்டி,ஏப்.10: நீலகிரி மாவட்டத்தில் சுமார் 55 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகள் என மொத்தம் 199 தொழிற்சாலைகள் மாவட்டம் முழுவதும் உள்ளன. இவற்றில் 23 ஆயிரத்து 483 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கு அவர்கள் இருக்குமிடங்களுக்கே சென்று தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட துவங்கியது. அப்போது முதல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை நீலகிரி மாவட்டத்தில் 3 லட்சத்து 96 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் அரசு ஊழியர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயது மற்றும்  இணை நோய் உள்ள 45 வயதிற்கு மேற்பட்டோர்கள் என 82 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 199 தேயிலை தொழிற்சாலைகளில் பணியாற்ற கூடிய 23 ஆயிரத்து 483 தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. அவர்கள் இருக்குமிடங்களுக்கே சென்று தடுப்பூசி போடப்பட உள்ளது. தடுப்பூசி போடுவதால் கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள முடியும். எனவே 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டு கொள்ள முன்வர வேண்டும், என்றார்.

Related Stories: