உயர மறுக்கும் கேரட் விலை

ஊட்டி,ஏப்.10: நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் கேரட் விலை தொடர்ந்து பல மாதங்களாக உயராமல் உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம் மேற்க்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், பீன்ஸ், பட்டாணி, வெள்ளை பூண்டு, முள்ளங்கி, முட்டைகோஸ், காலிபிளவர் போன்ற காய்கறிகள் அதிகளவு பயிரிடப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரமாக வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ெகாண்டுச் செல்ல முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

கேரட்டிற்கு விலை குறைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.கடந்த ஆண்டு கிலோ ஒன்று ரூ.60 முதல் 80 வரை விற்பனையானது.

ஆனால், படிப்படியாக விலை வீழ்ச்சி ஏற்பட்டு கடந்த பல மாதங்களாக ஊட்டி கேரட் விலை கிலோ ரூ.10 முதல் 25 வரையே விற்பைனயாகிறது. கேரட் தோட்டங்களில் தொழிலாளர்களை வைத்து பறித்து, பின் அவைகளை கழுவி மூட்டைகளாக மாற்றி ஊட்டியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் கொண்டுச் சென்று விற்பனை செய்யவதற்கு ஆகும் செலவு கூட சில சமயங்களில் கிடைப்பதில்லையாம்.

இதனால், கேரட் பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லரை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் கேரட்டுக்களில், 50 சதவீதம் கேரட் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கே கொண்டுச் சென்று விற்பனை செய்யப்படுகிறது.

அங்கு சில்லரை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், கேரட் விற்பனை பாதிக்க வாய்ப்புள்ளது.

மேலும், பாதிப்பு அதிகரித்தால், மார்க்கெட்டுகள் மூடப்படுமாயின், உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகளை உரிய விலைக்கு விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: