கொரோனா பாதிப்பு எதிரொலி தாவரவியல் பூங்கா புல் மைதானத்தில் சுற்றுலா பயணிகள் அமர்வதற்கு தடை

ஊட்டி,ஏப்.10:  தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது பொதுமக்களை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது.

நீலகிரி மாவட்டத்திலும் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த வாரம் வரை நாள் ஒன்றுக்கு 5 முதல் 10 பேர் வரை மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 25க்கும் மேற்பட்டோர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், வெளியூர் சென்று திரும்பும் பலருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதற்கான அறிகுறிகள் உள்ளது.

சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், நோய் தொற்று பரவாமல் தடுக்க வரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் வழக்கம் போல், புல் மைதானங்களில் வெகு நேரம் அமர்ந்து விளையாட அனுமதியில்லை.

மாறாக, சுற்றுலா பயணிகள் பூங்காவை நடந்துச் சென்று அனைத்து பகுதிகளையும் சுற்றி பார்த்துவிட்டு, எங்கும் அமராமல் மீண்டும் வெளியில் செல்ல ஏற்றவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு எவ்வித தடையும் இல்லை.

அதே சமயம், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இனி புல் மைதானங்களில் அமர்வற்கு தடை விதிக்கப்படுகிறது. வழக்கம் போல், பூங்காவிற்குள் வரும் சுற்றுலா பயணிகள் அனைத்து பகுதிகளையும் சுற்றி பார்த்துவிட்டு வெளியில் செல்ல ஏற்றவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சுற்றுலா பயணிகள் கட்டாயம் முககவசம் அணிந்துக் கொண்டு சுற்றுலா தலங்களுக்குள் செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என்றார்.

Related Stories:

>