நகராட்சியின் அலட்சியத்தால் குடியிருப்புக்குள் புகுந்த சாக்கடை நீர்

தாராபுரம், ஏப். 10:  தாராபுரம் நகராட்சியின் அலட்சியத்தால் குடியிருப்புக்குள் சாக்கடை நீர் புகுந்தது. இதனால் போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.

தாராபுரம் நகராட்சி 20 ஆவது வார்டு காந்திபுரம் குறுக்கு தெருவில் கடந்த 30 நாட்களுக்கு மேலாக குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகள் சாக்கடை கழிவு நீர் செல்லும் கால்வாயை முற்றிலுமாக அடைத்து கழிவுநீர் வெளியேற வழியின்றி போனது.

   இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கால்வாய்களில் தேங்கி நின்று சாலைகளில் வழிந்தோடுகிறது. மேலும் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து பொதுமக்களுக்கு தொற்றுநோய் யை பரப்பும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்றி கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யக்கோரி பொதுமக்கள் அளித்த புகார்கள் வழக்கம்போல நகராட்சி நிர்வாகத்தால் உதாசீனப்படுத்த பட்டுள்ள நிலையில் நேற்று  தாராபுரத்தில் இருந்து அலங்கியம் செல்லும் சாலையில் கழிவுநீர் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து சாலைகளில் ஓடியதால் பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டனர். நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் குடியிருப்பு வாசிகள் அனைவரும் திரண்டு மறியல் போராட்டம் நடத்தப் போவதாக முடிவு செய்துள்ளனர்.

Related Stories: