ரமலான் நோன்பு தொழுகைக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி தர வேண்டும்

திருப்பூர், ஏப். 10: ரமலான் நோன்பு  வருவதையொட்டி தொழுகைக்கு கூடுதல் நேரம் ஒதுக்கிதர வலியுறுத்தி அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தமிழக அரசு கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு சட்டத்தினை நீட்டித்து பிறப்பித்துள்ள ஆணையில் வழிபாட்டு தலங்களை இரவு 8 மணிக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்கள் புனித மாதமாக கடைபிடிக்கும் ரமலான் மாதம் இன்னும் ஒரு சில நாட்களில் வரவுள்ள நிலையில், வெளி வந்துள்ள இச்செய்தி குறிப்பு இஸ்லாமியர்களை மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளாக்கியது. இப்புனித மாதத்தில் தான் பகல் முழுவதும் நோன்பிருந்து இரவில் விழித்திருந்து தங்கள் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவார்கள்.

எனவே அவர்களின் வணக்க வழிபாட்டிற்கு உதவும் வகையில் கட்டுப்பாடுகளை இரவு 8 மணிலிருந்து 10 மணியாக உயர்த்தி தருமாறு இஸ்லாமிய சமுதாயத்தின் சார்பாக பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு அனுமதியளிக்கும் பட்சத்தில் அரசு கூறியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தொழுகை மேற்கொள்வோம். இவ்வாறு கூறியுள்ளனர்.

Related Stories:

>