வட்டக்கிணறுகள் வறண்டதால் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்க கோரிக்கை

உடுமலை, ஏப். 10:  குடிநீர் எடுக்க பயன்படும்,ஆற்றுக்குள் இருக்கும் வட்டக்கிணறுகள் வறண்டதால் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலை அருகே உள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இந்த அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன.

கடந்த ஆண்டு பருவமழை காலத்திலும், இந்த ஆண்டு ஜனவரியிலும் பெய்த மழை காரணமாக அணை நிரம்பி 100 நாட்களுக்கும் மேலாக 88 அடிக்கு மேல் முழு கொள்ளளவில் இருந்தது. தற்போது நீர்வரத்து குறைந்ததால் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

அணையில் நேற்று 86.68 அடிக்கு நீர்மட்டம் இருந்தது. 20 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. 74 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

அமராவதி ஆற்றில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் ஆற்றுப்பகுதி வறண்டு கிடக்கிறது. கொழுமம் பகுதியில் வெறும் பாறைகளாக காட்சி அளிக்கிறது.

மேலும் கல்லாபுரம் ஊராட்சி, சங்கராமநல்லூர், குமரலிங்கம், மடத்துக்குளம், கணியூர் பேரூராட்சிகளில் குடிநீருக்காக பயன்படுத்தப்படும் வட்டக்கிணறுகள் வறண்டு கிடக்கின்றன.

வழக்கமாக அமராவதி அணையில் ஏப்ரல், மே மாதங்களில் 25 அடி அளவுக்குத்தான் நீர்மட்டம் இருக்கும். ஆனால் தற்போது ஏறக்குறைய முழு அளவில் நீர்மட்டம் உள்ளது. எனவே, அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்தால், வட்டக்கிணறுகள் நிரம்பி, கிராமங்களில் குடிநீர் பிரச்சினை தீரும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.

Related Stories: