தெருவோர குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் பெண்களுக்கு மக்கள் பாராட்டு

திருப்பூர், ஏப். 10: திருப்பூரில் தெருவோர குழந்தைகளுக்கு அவர்கள் இருப்பிடத்திற்கு சென்று பாடம் சொல்லி தரும் பெண்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

திருப்பூர் கஜலட்சுமி தியேட்டர் வளம் பாலம் அருகே தெருவோர பகுதியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பின்னல் கூடை, பினாயில் போன்ற குடிசைத் தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு 2 வயது முதல் 13 வயது வரை 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளன. இந்த குழந்தைகள் அனைவரும் அருகில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

தற்போது கொரோனா பாதிப்பால் பள்ளிக்கு செல்ல முடியாத நிலையில், இவர்களுக்கு திருப்பூர் பெரியார் காலனியை சேர்ந்த அருணாமேரி, தென்னம்பாளையத்தை சேர்ந்த வள்ளியம்மாள் ஆகியோர் அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று பாடம் சொல்லி தருகின்றனர்.

இவர்களின் இந்த சமூக சேவையை அப்பகுதி மக்கள் பாராட்டுகின்றனர். இதுகுறித்து அருணாமேரி கூறுகையில், பெரியார் காலனியில் வசிக்கிறேன். பி.பி.எம்., முடித்து வீட்டில் டியூசன் எடுக்கிறேன். ஒரு முறை இந்த வழியாக வரும் போது, குழந்தைகள் ஜாலியாக விளையாடுவதை பார்த்தேன். என்னிடம் டியூசன் வரும் குழந்தைகள் நல்ல வசதியுள்ளவர்கள். இவர்களுக்கு ஏன் சொல்லித்தர கூடாதுனு தோணுச்சு. 2 வயசு முதல் 13 வயசு வரை 25 குழந்தைகள் இருக்காங்க. பக்கத்துல அரசு தொடக்கப்பள்ளியிலதான் படிக்கிறார்கள். ஆனால் அடிப்படை கல்வியறிவு கூட இல்லை. கொரோனா தொற்றால் பள்ளி பக்கமே போகாததால், எல்லாம் மறந்து போச்சுனு சொன்னாங்க. புத்தகம், நோட்டு, சிலேட்டு கூட அவங்க கையில இல்லை. இவர்களுக்கு கடந்த மூன்று மாதமாக பாடம் சொல்லித்தரேன். என்னுடன் வள்ளியம்மாள் என்பவரும் இணைந்து பாடம் சொல்லி தருகிறார். தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரை பாடம் சொல்லி தருகிறோம். இதை பார்த்து அவ்வழியே செல்பவர்கள் பலர் தங்களால் முடிந்த நோட்டு, புத்தகங்கள் தந்து உதவி செய்கிறார்கள, என்றார்.

Related Stories: