அரசு மருத்துவமனை, சுகாதார நிலையங்களில் 45 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட ஆர்வம்

கோவை, ஏப்.10: கோவை மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆர்வம்  காட்டி வருகின்றனர்.

கோவையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து  வரும் நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், காலையிலேயே அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்,  அரசு மருத்துவமனை போன்றவற்றில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரிசையில் காத்திருக்கின்றனர். சுகாதார துறையினர் கூறியதாவது: ஆரம்பத்தில் கொரோனா தடுப்பூசி,  முன்கள பணியாளர்களுக்கு மட்டுமே  போடப்பட்டு வந்தது. அதன்பின், பொதுமக்களும் தடுப்பூசி  போட்டுக்கொள்ளலாம் என அரசு அறிவித்து இருந்தது. ஆனால், இந்த  தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் இடையே போதிய ஆர்வம்  இல்லாமல் இருந்தது. தற்போது, தினமும் தொற்று அதிகரித்து  வருவதை தொடர்ந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி  வருகின்றனர்.

மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நகர்புற சுகாதார  நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீண்ட வரிசையில்  காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். கோவை அரசு மருத்துவமனையில் 4,500 டோஸ் தடுப்பூசிகளும்,   இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 4 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகளும், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் 2,370 தடுப்பூசிகளும், மாநகராட்சி  நகர்ப்புற சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய அளவு கொரோனா தடுப்பூசி இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.  எனவே, 45 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: