ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் ஆராய்ச்சி மூலம் புதிய கண்டுபிடிப்பு

கோவை, ஏப்.10: கோவை வட்டமலைப்பாளையம்  ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் எல் அண்ட் டி டெக்னாலஜி சர்வீசஸ் அகில இந்திய அளவில் நடத்திய புதுமை படைப்புகளின் துவக்கம்-டெக்ஜியம் என்ற போட்டியில் 2ம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

புதுமை படைப்புகளின் துவக்கம் என்ற தலைப்பில் பல்வேறு சுற்றுக்களை கொண்ட இப்போட்டியில் அகில இந்திய அளவில் இருந்து என்ஐடி, ஐஐடி, விஐடி சென்னை, நாஸ்காம் மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் பெங்களூரு போன்ற நிறுவனங்களில் இருந்து குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், கம்ப்யூட் விஷன், பைவ்ஜி, பணிச்சூழலியல், நிலைத்தன்மை என பல்வேறு தலைப்புகளில் இருந்து திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. அவற்றுள் கோவை ராமகிருஷ்ணா கல்லூரி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவர்கள் தரணி, மாரிகிருஷ்ணன், நிஷாந்த், விக்னேஸ்வரன் ஆகியோர் துணை பேராசிரியர்கள் பாலமுருகன் மற்றும் வேல்முருகன் மேற்பார்வையில் குளிர்சாதன பெட்டிகளில் ஆற்றல் திறன்மிக்க பனிக்கட்டியை உறையவைக்கும் முறை என்ற தலைப்பில் சமர்ப்பித்த திட்டத்திற்கு 2ம் இடம் மற்றும் பரிசுத் தொகையாக ரூ.5 லட்சம் பெற்றனர்.

2017 முதல் 4 முறை நடைபெற்ற இப்போட்டியில் இக்கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 3வது முறையாக பரிசுகளை வென்றுள்ளனர். பரிசு பெற்ற மாணவர்களை எஸ்என்ஆர் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசுவாமி, முதல்வர் என்.ஆர். அலமேலு, துணை முதல்வர் கருப்புசாமி, ஆராய்ச்சிக்கூட பொறுப்பாளர்கள் கணேஷ் மற்றும் ராம்குமார் ஆகியோர் பாராட்டினார்கள்.

Related Stories: