வாக்கு எண்ணும் மையத்தில் கொரோனா பரவ வாய்ப்பு

கோவை, ஏப். 10: கோவை வாக்கு எண்ணும் மையத்தில் கொரோனா பரவ வாய்ப்பு உருவாகியுள்ளது. அரசியல்கட்சி முகவர்கள் தவிக்கின்றனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 6ம் தேதி 4427 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதனையடுத்து தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான அரசு தொழில்நுட்ப கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள காப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளது. இது அந்தந்த சட்டமன்ற தொகுதி பொது பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் ஆகியோர் முன்னிலையில் பூட்டி முத்திரையிடப்பட்டது.

இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த சட்டமன்ற  தொகுதிக்கென தனித்தனியே அமைக்கப்பட்டுள்ள காப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மத்திய தொழில் பாதுகாப்புப்படை வீரர்கள், ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு காவலர்கள் ஆகியோரை கொண்டு மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இம்மையத்தில் உட்புறம் மற்றும் வெளிப்புறம் 150 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகள் உள்ள  பகுதிகளில் 70 கண்காணிப்பு கேமராக்களும், மையத்தின் வளாகம், நடைபாதை உள்ளிட்ட பகுதிகளில் 80 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு கேமராக்களில் பதிவாகும்  காட்சிகளை 24 மணி நேரமும் கண்காணிப்பதற்கு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு அறைகளை வேட்பாளர்களின் முகவர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ள அறையிலிருந்தே கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும்  பார்த்துக்கொள்ளும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில், வேட்பாளர்களின் முகவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட அறை முற்றிலும் அடிப்படை வசதிகள் குறைவாகவும், கொரோனா பரவ வாய்ப்புள்ளதாகவும் முகவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளரின் முகவர் பூபாலன் கூறியதாவது: முகவர்கள் தங்கும் அறை முழுவதும் தகர கொட்டகையாக உள்ளது. ஒரே ஒரு கொட்டகை தான். அதில் தற்போது 50க்கும் மேற்பட்டோர் உள்ளோம். மேலும், இனி வரும் நாட்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறை முற்றிலும் இடப்பற்றாக்குறையாக உள்ளது. இதனால், கொரோனா பரவ வாய்ப்புள்ளது. மேலும், இரவு நேரங்களில் கொசு கடி தாங்க முடியவில்லை. போதுமான அளவு கழிப்பறை வசதி இல்லை.

இங்குள்ள கேண்டீனில் குடிக்க டீ கூட கிடைப்பதில்லை.

இதற்காக அடிக்கடி வெளியேயும் சென்று வர முடியவில்லை. மேலும், இரவு நேரங்களில் விஷ சந்துக்கள் நடமாட்டமும் உள்ளது. உடனடியாக அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: