வண்ணாரப்பேட்டையில் பத்து ரூபாய் மருத்துவர் காலமானார்

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை பாலு முதலி தெருவில் கடந்த 50 ஆண்டுகளாக ரூ.10க்கு மருத்துவம் பார்த்து வந்த பிரபல மருத்துவர் கோபால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்தவர் கோபால். கடந்த 1966ல் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பு முடித்து சென்னைக்கு வந்தார். பின்னர், சென்னையில் மருத்துவக் கல்லூரியில் எம்.எஸ் படித்துள்ளார். இதையடுத்து, மருத்துவ படிப்பு முடித்த இவர் அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனை, ராயப்பேட்டை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி உள்ளார்.

அதன் பிறகு, கடந்த 2002ம் ஆண்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் ஆகவும், மருத்துவ பேராசிரியராகவும் பணியாற்றி பெயரெடுத்தவர். மருத்துவர் கோபால் கடந்த 1969ம் ஆண்டு வண்ணாரப்பேட்டையில் சிறியதாக கிளினிக் வைத்து மக்களுக்கு சேவை செய்யும் வகையில் மருத்துவம் பார்த்து வந்தார். ஆரம்பத்தில் ரூ.2க்கு மருத்துவம் பார்த்து மக்களுக்கு சேவையாற்றி வந்த கோபால் 1976ம் ஆண்டு முதல் ரூ.5க்கு மருத்துவம் பார்க்க ஆரம்பித்தார். இதனை தொடர்ந்து சில்லரை தட்டுப்பாடு காரணமாக மக்களாகவே அவருக்கு ரூ.10 வழங்கி மருத்துவம் பார்த்து வந்தனர்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு இலவச மருத்துவம் பார்த்து மருந்து மாத்திரைகளையும் வழங்கியுள்ளார். இந்நிலையில், துணைவியாரை இழந்த மருத்துவர் கோபால், வண்ணாரப்பேட்டையில் கிளினிக்கில் தங்கி மருத்துவம் பார்த்து வந்துள்ளார். கடந்த 50 ஆண்டுகளாக ரூ.10க்கு மருத்துவம் பார்த்து வந்த பிரபல மருத்துவர் கோபால் தனது 77வது வயதில் உடல்நலம் சரியில்லாமல் நேற்று உயிரிழந்தார். அவருடைய இறப்பு பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, வண்ணாரப்பேட்டையில் ரூ.5க்கு மருத்துவம் பார்த்து உயிரிழந்த ஜெயச்சந்திரனின் மறைவு மக்களிடையே நீங்காமல் உள்ள நிலையில் மீண்டும் ரூ.10க்கு மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் கோபால் உயிரிழப்பு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories: