கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக முன் அறிவிப்பின்றி தாம்பரம் மார்க்கெட்டை மூட உத்தரவு

தாம்பரம்: கொரோனா வைரஸ் தொற்று நோய் இரண்டாம் அலை தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் இன்று முதல் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தாம்பரம் மார்க்கெட் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் முழுமையாக மூட வேண்டும், என தாம்பரம் நகராட்சி ஆணையர் சித்ரா நேற்று மாலை திடீரென அறிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் 300க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளுடன், நகராட்சி ஆணையர் சித்ரா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது வியாபாரிகள், ‘‘எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி திடீரென இன்று முதல் மார்க்கெட் பகுதி முழுவதும் மூடப்படும். எனவே, அனைத்து கடைகளையும் இன்று முதல் திறக்கக்கூடாது என அறிவித்திருக்கிறீர்கள். இது எந்த விதத்தில் நியாயம். ஏற்கனவே கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக, நாங்கள் வியாபாரம் இன்றி, குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து தற்போது கடனில் உள்ளோம்.

அதிலிருந்து மீண்டு வருவதற்குள் மீண்டும் எந்த ஒரு முன்னறிவிப்பு மற்றும் முன்னேற்பாடுகள் இன்றி திடீரென மார்க்கெட் பகுதி முழுவதும் மூடப்படும் என அறிவித்து உள்ளீர்கள். இவ்வாறு செய்வதால், நாங்கள் அனைவரும் வாழ்வாதாரம் இழக்கும் நிலை ஏற்படும். கொரோனா தொற்று ஏற்பட்டு, உயிர் இழப்பதை விட இது போன்ற முன்னறிவிப்பின்றி எடுக்கப்படும் நடவடிக்கைகளால் நாங்கள் உயிரை மாய்த்து கொள்வதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.’’ என்றனர்.

இதையடுத்து, நகராட்சி ஆணையர் சித்ரா, ‘‘கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த இவ்வாறு மட்டுமே செய்ய முடியும். பெரிய கடைகளை திறந்து கொள்ளுங்கள். பூ, பழம், காய்கறி மற்றும் மீன் கடை ஆகியவற்றை இரண்டு நாட்களுக்கு கண்டிப்பாக முழுமையாக திறக்கக் கூடாது. மற்றபடி தள்ளு வண்டிகளில் வைத்து எங்கும் நிற்காமல் வியாபாரம் செய்யாமல், நகர்ந்தபடியே வியாபாரம் செய்து கொள்ளலாம். உங்களுக்கு 12ம்தேதி (திங்கட்கிழமை) மாற்று இடம் தேர்வு செய்து தருவது குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘இதுபோன்ற கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், வியாபாரிகளுடன் நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் முதலில் ஆலோசனை நடத்தி, அதற்கு பின்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் எந்த ஒரு ஆலோசனையையும் நடத்தாமல், திடீரென கடைகளை முழுமையாக மூடவேண்டும் என தெரிவிப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை. இதனால் சிறு வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள்.

இது நகராட்சி ஆணையரின் முறையற்ற செயல்.இவர், கொரோனா இரண்டாம் அலை பரவலை தடுக்க, இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவிட்டு, தற்போது பாதிப்பு எண்ணிக்கைகள் அதிகரித்து வருவதாக கூறி, திடீரென தாம்பரம் மார்க்கெட் பகுதி முழுவதும் அடைக்கப்படும், வியாபாரிகள் மார்க்கெட் பகுதியில் வியாபாரம் செய்யக்கூடாது. இரண்டு நாட்களுக்கு பின்னர், மாற்று இடம் குறித்து, ஆலோசிப்பதாக அலட்சியமாக அறிவிக்கிறார். இதனால், வியாபாரிகள் கடனுக்கு பணம் வாங்கி காய்கறிகள், பழங்கள் என வாங்கிவிட்டு தற்போது என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கின்றோம். இந்த திடீர் அறிவிப்பினால், எங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதுடன், எங்கள் குடும்பத்தை எப்படி காப்பாற்றுவது என தெரியவில்லை என்று வேதனை தெரிவித்தனர்.

Related Stories: