சாஸ்திரி பவனுக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஊழியர்கள் அலறி அடித்து வெளியே ஓடியதால் பரபரப்பு: மர்ம நபருக்கு போலீஸ் வலை

சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனுக்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தை தொடர்ந்து, அங்கு பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை நுங்கம்பாக்கத்தில் மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். வழக்கமாக, ேநற்று காலை அலுவலகம் இயங்கிக் கொண்டிருந்தது.

அப்போது, எழும்பூரில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு காலை 10.30 மணி அளவில் அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்ம நபர், ‘சாஸ்திரிபவனில் வெடிகுண்டு வைத்திருக்கிறேன். இன்னும் சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடித்து சிதறும்’ என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த காவலர்கள் சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் சூர்யா என்ற மோப்ப நாய் உதவிகளுடன் விரைந்து சென்றனர். அதற்குள் சாஸ்திரி பவனில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு அபாய ஒலியை எழுப்பி அனைவரும் உடனே வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது. அப்போது என்ன என்று தெரியாமல் ஊழியர்கள் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு அலுவலகத்தை விட்டு வெளியேறி சாலையில் வந்து நின்றனர். பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சாஸ்திரிபவன் முழுவதும் போலீசார் சோதனை நடத்தினர். ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்த அதிரடி சோதனையில் எந்த வெடிகுண்டுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது வெறும் புரளி என தெரியவந்தது. இதையடுத்து சாஸ்திரி பவனுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரின் செல்போன் எண்ணை வைத்து நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: