மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தை பொதுமக்கள் பார்க்க அனுமதி

சென்னை: ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகள் அரைகுறையாக இருந்த நிலையில் கடந்த ஜனவரி 27ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பொதுமக்கள் பார்வையிடவும் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், அறிவுசார் பூங்கா மற்றும் அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ள வேண்டியிருந்ததால் ஒரு வாரத்தில் ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது. இப்பணிகளை பிப்ரவரி 20ம் தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனாலும், பணிகளை முடிக்க முடியாத நிலையில் அறிவுசார் பூங்கா, அருங்காட்சியகத்தை கடந்த பிப்ரவரி 24ம் தேதி முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார். தொடர்ந்து, பணிகள் மேற்கொள்ள இருந்ததால் திறக்கப்பட்ட 2 மணி நேரத்தில் மீண்டும் ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது.

இந்நிலையில், ஜெயலலிதா நினைவிடத்தில் அருங்காட்சியகம், அறிவுசார் பூங்கா அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்து. இதை தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்தை நேற்று காலை 10 மணி முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நினைவிடத்தில் அமைக்கப்பட்ட அருங்காட்சியகம், அறிவுசார் பூங்காவும் நேற்று திறக்கப்பட்டது.

இந்த அருங்காட்சியகத்தில் டிஜிட்டல் திரையில் இடம்பெற்றிருந்த ஜெயலலிதாவின் பள்ளிப் பருவம் முதல் சினிமா வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை சம்பவங்களை கண்டு ரசித்தனர். மேலும், பார்வையாளர்கள் தொடு திரையின் மூலம் ஜெயலலிதாவுடன் பேசும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

அறிவுசார் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள 50 பேர் அமரும் வசதியுடன் கூடிய ஆடிட்டோரியத்தில் ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் தொடர்பாக 8 டிஜிட்டல் வீடியோ காட்சிகள் ஒளிபரப்பட்டன. மேலும், ஜெயலலிதாவின் சிலிக்கான் சிலைகள் வைக்கப்பாட்டுள்ளன.

Related Stories: