புஞ்சை புளியம்பட்டி அருகே வைக்கோல் போர் தீப்பிடித்து எரிந்து நாசம்

சத்தியமங்கலம், ஏப். 10: புஞ்சை புளியம்பட்டி அருகே வைக்கோல் போர் தீப்பிடித்து எரிந்து நாசமானது.  சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள மாதம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வெங்க நாயக்கன்பாளையம் கிராமம் கைக்கோளன் தோட்டத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (70), விவசாயி. இவர் தனது விவசாய தோட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மாடுகளை வைத்து பராமரித்து வருகிறார். மாடுகளுக்கு தேவையான தீவனமான வைக்கோல் கட்டுகளை ரூ.1 லட்சம் செலவில் வாங்கி, தனது தோட்டத்தில் அடுக்கி வைத்திருந்தார்.  மேலும் வைக்கோல் மழை நீரில் நனையாமல் இருக்க ரூ.20 ஆயிரம் செலவில் தார்ப்பாய் வாங்கி வைக்கோல் கட்டுகள் மீது விரித்து வைத்திருந்தார்.இந்நிலையில், நேற்று மதியம் ஒரு மணி அளவில் திடீரென வைக்கோல் போர் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைக்கண்ட சுப்பிரமணி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் தீயணைப்பு துறை வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று வைக்கோல் போரில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், தீ விபத்தில் வைக்கோல் போர் முழுவதும் எரிந்து நாசமானது. இது குறித்து தகவலறிந்த புஞ்சைபுளியம்பட்டி போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். ரூ.1 லட்சம் மதிப்புள்ள வைக்கோல் எரிந்து சேதமானதாகவும், இதற்கு நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் விவசாயி சுப்பிரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: