×

வாடிக்கையாளர்கள் மாஸ்க் அணியாவிட்டால் கடைக்காரர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்

ஈரோடு, ஏப். 10: மாஸ்க் அணியாமல் வாடிக்கையாளர்கள் கடைக்கு வந்தால், அனுமதிக்க கூடாது என்றும்,  அவ்வாறு அனுமதித்தால் சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் தான் அதற்கு பொறுப்பேற்க  வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.கொரோனா  தடுப்பு நடவடிக்கை குறித்து ஈரோட்டில் உள்ள பல்வேறு வியாபாரிகள்  சங்கங்களின் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில்  நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மாநகராட்சி ஆணையாளர்  இளங்கோவன் பேசியதாவது: கொரோனா தாக்கம் கடந்த முறையை விட இம்முறை மிகவும்  வீரியமாக உள்ளதாக என தெரியவந்துள்ளது. எனவே, தடுப்பு நடவடிக்கைகளை அனைவரும்  முறையாக பின்பற்ற வேண்டும். மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி, கிருமி நாசினி  கொண்டு கைகளை கழுவுதால் உள்ளிட்டவைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். 45  வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அலுவலகம்,  குடியிருப்பு பகுதி, தொழிற்சாலைகள் உள்ளிட்ட பகுதிகளில் 45 வயதிற்கு  மேற்பட்டவர்கள் குறைந்தபட்சம் 50 பேர் கொண்ட ஒரு குழு இருந்தால், அந்த  இடத்தில் மாநகராட்சி சார்பில், நேரில் வந்து முகாம் நடத்தி தடுப்பூசி போட  வழிவகை செய்யப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில், ஜவுளி  மார்க்கெட் உள்பட அனைத்து கடைகளிலும் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே  அனுமதிக்கப்படுவார்கள். திங்கட்கிழமை இரவு நடைபெறும் ஜவுளி சந்தை தடை  செய்யப்படும். அதற்கு பதிலாக பகலில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் சந்தை  நடத்திக்கொள்ளலாம்.  

மேலும் தினசரி காய்கறி மார்க்கெட்டில் மாநகராட்சி  ஒதுக்கி உள்ள கடைகளுக்கு மேல் கூடுதல் கடைகள், குறிப்பாக நடைபாதைகளில்  கடைகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காய்கறி ஏற்றி வரும்  வாகனங்கள் ஒவ்வொன்றாகத்தான் மார்க்கெட்டிற்குள் காய்கறிகள் இறக்க  அனுமதிக்கப்படும். 6 மணிக்கு மொத்த வியாபாரம் முடித்துக்கொள்ள வேண்டும்.  மீன் மார்க்கெட் ஞாயிற்றுக்கிழமை முழுமையாக அடைக்கப்படும். மட்டன், சிக்கன்  கடைகள் அரை கிலோ, ஒரு கிலோ என பாக்கெட்டுகளில் அடைத்து மட்டுமே விற்பனை  செய்ய வேண்டும். டீ கடைகளில் பேப்பர் கப்-களில் மட்டுமே டீ வழங்க வேண்டும்.  ஓட்டல், டீ கடைகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். பஸ்  ஸ்டாண்டு வளாகத்தில் அனைத்து கடைகளும் இரவு 11 மணிக்கு மூடப்பட வேண்டும்.  மாஸ்க் இல்லாமல் கடைக்கு வாடிக்கையாளர்கள் வந்தால், கடைக்காரர்கள் தான்  பொறுப்பேற்க வேண்டும். மாஸ்க் இல்லாத வாடிக்கையாளர்களுக்கு கடைக்காரர்கள்  மாஸ்க் கொடுத்து அதற்கான பணத்தை வாடிக்கையாளர்களிடமிருந்து வியாபாரிகள்  வசூலித்துக்கொள்ளலாம். கடைகளுக்கு முன்பாக ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும்  இடையே 2 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். தள்ளுவண்டி கடைகளில் கூட்டம்  சேர்க்க கூடாது.

ஈரோடு சம்பத்நகர் நால்ரோடு பகுதியில் தள்ளுவண்டி கடைகள்  அப்புறப்படுத்தப்படும். கடைகளுக்குள் சென்று பொருட்களை வாங்கும் போது,  10க்கு 10 கடையாக இருந்தால் 2 வாடிக்கையாளர்கள் மட்டுமே உள்ளே செல்ல  அனுமதிக்கப்பட வேண்டும். கடைகளில் வாடிக்கையாளர்கள் விபரங்கள் அடங்கிய  பதிவேடு பராமரிக்க வேண்டும். விதிமுறைகளை மீறும் வணிக நிறுவனங்களுக்கு  முதல் முறையாக மட்டுமே அபராதம் விதிக்கப்படும். 2வது முறையாக அதே தவறு  செய்தால் சீல் வைக்கப்படும். ஒரே பகுதியில் 3 வீடுகளில் கொரோனா பாதிப்பு  இருந்தால் அந்தப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக கருதப்பட்டு சீல்  வைக்கப்படும். இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

Tags :
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் 48...