×

சுகாதாரத்துறையினருக்கு கலெக்டர் உத்தரவு மாவட்டம் முழுவதும் சளி, காய்ச்சல் கண்டறியும் முகாம்

ஈரோடு, ஏப். 10: ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் கண்டறியும் வகையில் முகாம்கள் மற்றும் வீடு வீடாக சென்று பரிசோதனைகள் நடத்த வேண்டும் என்று சுகாதாரத்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து, உழவா் சந்தை, காய்கறி சந்தை, பேக்கரி, தேநீர் கடை, உணவகங்கள், வணிக வளாகங்கள், மளிகை கடை உள்ளிட்ட வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கலெக்டர் கதிரவன் பேசியதாவது: கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முனைப்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காததாலும், நாளுக்கு நாள் தொடர்ந்து நோய் தொற்று அதிகரித்து வருகிறது. நோய் பரவலை கருத்தில் கொண்டு திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு இன்று (10ம் தேதி) முதல் முதல் தடை விதிக்கப்படுகிறது. இதே போல ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களில் சில்லரை வியாபார கடைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் உணவு விடுதிகளில் பணிபுரியும் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொது மக்களின் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்படுவதையும், கிருமி நாசினி உபயோகப்படுத்துவதையும், முகக் கவசம் அணிவதையும் உறுதி செய்து, அனுமதிக்க வேண்டும். முகக்கவசங்கள் அணியாமல் இருப்பவர்களை கட்டாயமாக அனுமதிக்க கூடாது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள், வெளியில் வராத வகையில், காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களை கொண்டு 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்படும். மேலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் தொடர்ந்து நடத்திடவும், வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்களை தினந்தோறும் கண்காணிக்கவும், நோய் தொற்று ஏற்பட்டவர்களது தொடர்பில், இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த பரிசோதனைகள் மேற்கொள்வதையும் காவல்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், மாநகராட்சி ஆணையாளா் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Cold and Fever Diagnosis ,
× RELATED ஈரோட்டில் தேர்தலுக்கு தேவையான...