வாக்கு எண்ணும் மையத்தில் விதிமுறைகளை மீறினால் ஏஜென்ட் பாஸ் ரத்து

ஈரோடு, ஏப். 10: வாக்கு எண்ணிக்கை மையத்தில் விதிமுறைகளை மீறுவது, அரசியல் பேசுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால், ஏஜென்ட் பாஸ் ரத்து செய்ப்படும் என்று கலெக்டர் கதிரவன் எச்சரித்துள்ளார்.   வாக்கு எண்ணிக்கை மையங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து வேட்பாளர் மற்றும் முகவர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கலெக்டர் கதிரவன் பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், சித்தோடு சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் கோபி கலை அறிவியல் கல்லூரியில் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் தனி அறையில் சட்டமன்ற தொகுதிவாரியாக வைக்கப்பட்டு, சீல் இடப்பட்டு 24 மணி நேரமும் துணை ராணுவத்தினா், காவல் துறையினர் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

   மேலும் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளை பார்வையிட வேட்பாளர், முகவா–்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது. இதன்படி, ஒரே அனுமதிச்சீட்டில் மூன்று நபர்களுக்கு புகைப்பட அட்டையுடன் கூடிய அனுமதிச்சீட்டு வழங்கப்படும். ஆனால், இதன் மூலம் ஒரு சமயத்தில் ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வாகனங்கள் நிறுத்த ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். கண்டிப்பாக தீப்பெட்டி, எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்கள், புகையிலைப் பொருட்கள் போன்றவை அனுமதிக்கப்பட மாட்டாது. மீறி வைத்திருப்போரின் அனுமதிச்சீட்டு ரத்து செய்யப்படும். மது வகைகள் மற்றும் இதர குளிர்பானங்களுக்கு அனுமதி இல்லை. முகவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே இருக்க வேண்டும். அரசியல் பேசுவது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் நிலை ஏற்பட்டால், முகவர்களது அனுமதி ரத்து செய்யப்படும். மூன்று நபர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சுழற்சி முறையில் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அந்த நபர் இடையில் வெளியே செல்ல அனுமதி இல்லை. எனவே, வேட்பாளா–்கள், முகவா–்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கதிரவன் பேசினார்.

Related Stories: