கோர்ட்டு உத்தரவுபடி சீல் வைக்கப்பட்ட சாயப்பட்டறைகளில் ஆர்டிஓ ஆய்வு

ஈரோடு, ஏப். 10: ஈரோடு வெண்டிபாளையத்தில் கழிவு நீரை வெளியேற்றியதாக மூடி சீல் வைக்கப்பட்ட சாயப்பட்டறைகளில் கோட்டாட்சியர் சைபுதீன் நேற்று ஆய்வு செய்தார். ஈரோடு வெண்டிபாளையம், கோனவாய்க்கால், மணக்காடு, குப்பக்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான சாய மற்றும் சலவை பட்டறைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டறைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நிலத்தடியில் குழாய்கள் பதிக்கப்பட்டு காலிங்கராயன் வாய்க்காலில் நேரடியாக கலக்கப்படுவதாக தொடர்ந்து புகார் வந்தது. இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் சாயப்பட்டறைகளில் ஆய்வு செய்து, கழிவு நீரை வெளியேற்றியதாக 30 பட்டறைகளுக்கு சீல் வைத்தனர். இந்நிலையில், சீல் வைக்கப்பட்ட பட்டறைகளில் சில பட்டறைகள் விதிமுறைகளை முறையாக பின்பற்றி செயல்பட்டு வந்ததாகவும், எனவே மீண்டும் இயக்க அனுமதி வழங்கக்கோரி சாயப்பட்டறை உரிமையாளர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதைத்தொடர்ந்து கோர்ட்டு உத்தரவுபடி, சாய மற்றும் சலவை பட்டறைகளில் தகுந்த பாதுகாப்பு வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

இது குறித்து கோட்டாட்சியர் சைபுதீன் கூறியதாவது: கோர்ட் உத்தரவுப்படி சீல் வைக்கப்பட்ட பட்டறைகளின் உண்மை நிலை குறித்து மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், மின்வாரியம் ஆகியோருடன் இணைந்து ஆய்வு செய்யப்பட்டது.

கழிவு நீர் வெளியேற்றுவதற்காக நிலத்தடியில் போடப்பட்டிருந்த குழாய்கள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டதா? என்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 30 சாயப்பட்டறைகளில் 8 பட்டறைகள் நிரந்தரமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, மீதமுள்ள பட்டறைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக ஆய்வு அறிக்கை தயார் செய்யப்பட்டு கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: