கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா ரத்து

உளுந்தூர்பேட்டை, ஏப். 10:  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கூவாகம் கூத்தாண்டவர் கோயில். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான திருநங்கைகள் கோயிலுக்கு வந்து பூசாரி கையால் தாலிகட்டிக்கொண்டு விடிய, விடிய கும்மி அடித்து ஆடிபாடி மகிழ்வார்கள். அடுத்த நாள் சித்திரை தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கூத்தாண்டவர் கோயில் திருவிழா ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா வருகிற 15ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்கி 27ம் தேதி சாமி கண் திறத்தல் மற்றும் திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சியும், 28ம் தேதி சித்திரை தேரோட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் தமிழக அரசின் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் நடவடிக்கை காரணமாக இந்த ஆண்டும் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: