பண்ருட்டி அருகே மனைவியை கொன்ற கணவன் காவல்நிலையத்தில் சரண் பரபரப்பு வாக்குமூலம்

பண்ருட்டி, ஏப். 10: கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம்(31), கூலிதொழிலாளி. இவருக்கும் காங்கிருப்பு கிராமத்தை சேர்ந்த லட்சுமி (29) என்பவருக்கும் கடந்த 2020ம் ஆண்டு, ஜூன் மாதம் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. திருமணம் ஆன நாள் முதல் இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தனர். இதில் திருமணமாகி லட்சுமி எட்டு மாத காலத்தில் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அதிர்ச்சி அடைந்த அருணாசலம் அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்துள்ளார். இதனையடுத்து லட்சுமி கோபித்துக் கொண்டு தன் தாய் வீடான காங்கிருப்பு கிராமத்திற்கு சென்று விட்டார்.  இதன் காரணமாக அருணாசலம் மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.  இதனிடையே லட்சுமியின் பெற்றோர் இருவரையும் சமாதானம் செய்ததையடுத்து, இருவரும் குடும்பம் நடத்தினர். ஒரு சில தினங்களே இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் மீண்டும் அருணாசலம் மனதில் சந்தேக தீ எழுந்தது. இதையடுத்து, அவர், தனது மனைவியை விவாகரத்து செய்ய கடலூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.   இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவிக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், லட்சுமியை அருணாசலம் சரமாரியாக தாக்கியுள்ளார்.  பின்னர் துணியால் லட்சுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். ஒரு கட்டத்தில் மனைவியை கொன்று விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில், அருணாசலம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அப்போது, குழந்தையின் அழுகுரல் கேட்டு தன் மனதை மாற்றிக்கொண்டார். பின்னர் நேற்று காலை முத்தாண்டிக்குப்பம் காவல்நிலையத்திற்கு சென்று நடந்தவற்றை கூறி சரணடைந்தார்.

 இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த பண்ருட்டி டி.எஸ்.பி பாபு பிரசாத், காடாம்புலியூர் ஆய்வாளர் ரேவதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அருணாசலம் போலீசில் அளித்த வாக்குமூலம்: நானும் எனது மனைவியும் திருமணம் செய்து கொண்ட நாள் முதல் மகிழ்ச்சியாக தான் இருந்தோம். ஆனால் திருமணமாகி 8 மாதத்திலேயே குழந்தை பிறந்தது.  இதனால் எனக்கு அதிர்ச்சியும், சந்தேகமும் ஏற்பட்டது. இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது சரியான பதில் கூறாமல் மவுனம் காத்து வந்தாள். பலமுறை கேட்டும் சரியான பதில் கிடைக்காததால் சம்பவத்தன்று மனைவியிடம் தகராறில்  ஈடுபட்டேன். ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்துக்கு சென்ற நான் என் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்தேன். பின்னர் நானும் தற்கொலை செய்வதற்காக முயற்சித்த போது குழந்தையின் அழுகுரல் கேட்டு மனம் மாறினேன். பின்னர் காவல் நிலையத்தில் சரணடைந்தேன். இவ்வாறு கூறினார்.   இதையடுத்து, அருணாசலத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு மற்றும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  

Related Stories: