மலையடிப்பட்டி தூய தோமையார் ஆலய பெரிய தேரோட்டம்

மணப்பாறை, ஏப்.10: மணப்பாறை அருகே மலையடிப்பட்டி தூய தோமையார் திருவிழா பெரிய தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆலயத்தில் கடந்த 5ம் தேதி பாஸ்கா பெருவிழா மற்றும் தூய தோமையார் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நவநாள் நிகழ்ச்சிகள் நடைபெற்று, 8ம் தேதி இயேசுவின் பாடுகளின் பாஸ்கா மற்றும் உயிர்ப்பு பாஸ்கா ஆகியவற்றுடன் தொடங்கிய விழாவில், நேற்று உயிர்த்த தூய தோமையார் சந்திப்பு மற்றும் தேர் பவனி நடைபெற்றது. மாலையில் விழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர் தூய தோமையார் ஆலயத்தில் பங்குதந்தை அம்புரோஸ் நடத்திய சிறப்பு திருப்பலிக்கு பின் தேரடியிலிருந்து உயிர்த்த ஆண்டவர் உற்சவம் கொண்ட பெரிய தேர் ஊர்வலம் புறப்பட்டது. வடம் பிடித்து ஏராளமானோர் தேரை இழுத்து சென்றனர். சப்பரங்கள் பவனியும் முன்னே செல்ல, பெரிய தேர் மலையடிப்பட்டியில் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது. தேரின் மீது பொட்டுக்கடலை தூவி பொதுமக்கள் தேரை வரவேற்றனர். நகர் உலா வந்த பெரிய தேர் மீண்டும் தேரடிக்கு வந்து நிலைகொண்டது. இந்நிகழ்ச்சியில் மலையடிப்பட்டி பங்கு சார்ந்த மலைதாதம்பட்டி, ராயம்பட்டி, புதுப்பட்டி, கல்பாளையத்தான்பட்டி, பிச்சமணியாரம்பட்டி, தெற்கு அஞ்சல்காரன்பட்டி உள்ளிட்ட 18 பட்டி கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். தேரோட்டத்திற்கு பிறகு மலை மேல் உள்ள தூய தோமையார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனைகள் நடந்தன. டிஎஸ்பி., பிருந்தா, வையம்பட்டி இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் ஆகியோர் தலைமையிலான போலீசார் விழாவின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை பங்குதந்தை அம்புரோஸ், புனித தோமா, அமலவை அருள் கன்னியர்கள், மலையடிப்பட்டி தலைவர், நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

Related Stories: