பணித்தள பொறுப்பாளரை கண்டித்து 100 நாள் வேலை பயனாளிகள் சாலை மறியல்

துறையூர், ஏப்.10: உப்பிலியபுரம் அருகே 100 நாள் வேலைத்திட்ட பணி தள பொறுப்பாளரை மாற்றக்கோரி பயனாளிகள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். துறையூர் அடுத்த உப்பிலியபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலத்துடையாம்பட்டி ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக கவிதா பணியாற்றி வருகிறார். இவர் பயனாளிகளை கடந்த சில நாட்களாக 3 கி.மீ. தூரத்தில் உள்ள கருப்பம்பட்டியில் சென்று வேலை செய்யுமாறு கூறியுள்ளார். இதில் வயது முதிர்ந்தோர் சிலர் வெயிலின் தாக்கத்தால் மயக்கம் அடைந்துள்ளனர். அதை பொருட்படுத்தாமல் திரும்பவும் அதே இடத்திற்கு வேலை கொடுத்துள்ளார். பயனாளிகளுக்கு அருகே வேலை தருமாறு கேட்டும் தராததால் பணித்தள பொறுப்பாளர் கவிதாவை மாற்றக்கோரி 100 நாள் வேலை பயனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் துறையூர் புளியஞ்சோலை சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லலிதா, வடிவேலு உள்ளிட்ட அதிகாரிகள் சமரசம் பேசி பணித்தள பொறுப்பாளரை மாற்றுவதாக கூறினர். இதையடுத்து 100 நாள் பயனாளிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: