பொது சுகாதாரம், நோய்த்தடுப்பு மருந்து துறை சார்பாக கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆய்வு கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை சார்பாக, கொரோனா தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் முனைவர் கா.பாஸ்கரன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா ஆகியோர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது கலெக்டர் கூறியதாவது :மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல்களின்படி, கொரோனா நோய் தொற்று பரவல் இரண்டாம் அலை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் திருவள்ளுர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் தற்பொழுது வரை 919 நபர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு மருத்துவமனைகள் மற்றும் இல்லங்களில் தனிமைப்பட்டுள்ளார்கள்.

இதில் அதிகபட்சமாக ஆவடி மாநகராட்சியில் 234 நபர்களுக்கும், 14 ஊராட்சி ஒன்றியங்களில் 443 நபர்களுக்கும், பேரூராட்சிகளில் 93 நபர்களுக்கும், நகராட்சி பகுதிகளில் 143 நபர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் 94 இடங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, 4500 நபர்களுக்கு கொரோனா நோய்தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்ட்டு வருகிறது. 68 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இப்பரிசோதனை மேற்கொள்ள  உத்தரவிடப்பட்டுள்ளது. 15 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு இரண்டு இடங்கள் வீதம் 30 இடங்களில் நடமாடும் மருத்துவ முகாம்களும், 15 நடமாடும் வாகனங்களில் 4 இடங்கள் வீதம் 60 இடங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மொத்தம் 90 இடங்களில் நடமாடும் கொரோனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் நோய் பாதிப்ப ஏற்படுபவர்களின் எண்ணிக்கை வீதம் படிப்படியாக குறையும்.

 

மேலும், மாவட்டத்தில் இதுவரை முன்களப் பணியாளர்கள், அரசு அலுவலர்கள், விருப்பம் தெரிவித்தவர்கள் என 97,697 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் முன்களப் பணியாளர்கள் 26,204 நபர்களுக்கும், 45 வயதை கடந்த 21,900 நபர்களுக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 45 வயதை கடந்தவர்கள் என தோராயமாக 10,40,000 என கணக்கிடப்பட்டு அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு இடங்களிலும் குறிப்பாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தமிழக அரசின் உத்தரவின்படி, தடுப்பூசிகள் போட மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில்  முககவசம் அணியாத 10,685 நபர்களுக்கு ரூ. 19.87 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.   திருமண மண்டபங்கள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களிலும் சமூக இடைவெளி கடைபிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அதை தொடர்ந்து மீறுபவர்களுக்கு எச்சரிக்கும் விதமாக நோட்டிஸ்கள் வழங்கப்படுகிறது.  

தொடர்ந்து விதிகளை மீறுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட கட்டடத்தை மூடி சீல் வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். கொரோனா தடுப்பு பணிகளுக்காக 60 சிறப்பு மருத்துவர்களும், பரிசோதனைகள் மேற்கொள்வதற்கு கூடுதலாக ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே, பொதுமக்கள் கொரோனா நோய் தொற்று பரவலை தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உங்களது முழு ஒத்துழைப்பை தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இவ்வாய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி, திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை க.லோகநாயகி, திருவள்ளுர் அரசு மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி முதல்வர் அரசி வத்சவ், மருத்துவம், ஊரகநலப்பணிகள் இணை இயக்குநர் ராணி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர்கள் ஜவஹர்லால், பிரபாகர் மருத்துவர்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: