திருவேற்காடு நகராட்சியில் கொரோனா வழிகாட்டு நெறிகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை: ஆணையர் எச்சரிக்கை

பூந்தமல்லி: திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் வசந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து நகராட்சி ஆணையர் வசந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொரோனா நோய் தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் விதமாக திருவேற்காடு நகராட்சி நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திருவள்ளூர் மாவடட் ஆட்சியர் பொன்னையாவின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசு அறிவித்துள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள் திருவேற்காடு நகராட்சி பகுதிகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி. நகராட்சி சார்பாக பொது சுகாதாரத்துறை மூலம் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி முடக்கி விடப்பட்டுள்ளது.  ஒவ்வொரு கடைகளிலும், வர்த்தக நிறுவனங்கள், வணிக வளாகங்களில் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, சானிடைசர் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், தேநீர் கடைகள், தங்கும் விடுதிகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வருகிறது. தமிழக அரசின் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் மீறும் பட்சத்தில் நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அபராதம் விதிக்கவும் 14 நாட்களுக்கு கடையை மூடி சீல் வைக்கவும் மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அலட்சியப்படுத்தாமல் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி, நோய் தொற்று பரவாமல் இருப்பதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று அவர் கூறினார். அப்போது நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்தாஸ் உடனிருந்தார்.

Related Stories: