விதிகளுக்கு புறம்பாகவும், சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்திய ரேடிசன் புளூ நிர்வாகம் 10 கோடி இழப்பீடு தரவேண்டும்

சென்னை: விதிகளுக்கு புறம்பாகவும், சுற்றுச்சூழல் தாக்கத்தை  ஏற்படுத்தியதற்காக ரேடிசன் புளூ நிர்வாகம் மாநில கடலோர ஒழுங்கு மண்டல ஆணையத்துக்கு 10 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும். மேலும் கடற்கரையில் இருந்து 200 மீட்டர் தூரம் கட்டப்பட்டுள்ள 1,100 சதுர மீட்டர் கட்டிடத்தை 2 மாதத்துக்குள் இடிக்க வேண்டும் என தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சென்னையை சேர்ந்த கே.ஆர்.செல்வராஜ் குமார், மீனவர் நலச்சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: மாமல்லபுரம் கடற்கரை அருகே ரேடிசன் புளூ ஓட்டல் மற்றும் ரிசார்ட் அமைந்துள்ளது. கடலோர ஒழுங்குமுறை ஆணைய விதிகள்படி கடற்கரையில் இருந்து 500 மீட்டருக்கு அப்பால் தான் கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும். ஆனால் விதியில் சில திருத்தங்கள் செய்து, கடற்கரையில் இருந்து 200 மீட்டருக்கு அப்பால் கட்டிடங்கள் கட்டப்பட்டு இருந்தால், அவற்றுக்கு கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தில் முறையான அனுமதி பெற வேண்டும் என மாற்றம் கொண்டு வரப்பட்டது.

இந்த விதிகளுக்கு புறம்பாகவும் ரேடிசன் புளூ நிர்வாகம் கட்டிடம் கட்டி உள்ளது. எனவே அந்த கட்டிடத்தை இடிக்க உத்தரவிட வேண்டும், சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்தியதற்காக, அந்த நிறுவனத்துக்கு அபராதம் விதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர் சாய்பால்தாஸ் குப்தா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த ஆணையம், கடற்கரையில் இருந்து 200 மீட்டர் தூரத்துக்கு கட்டப்பட்டுள்ள 1,100 சதுர மீட்டர் கட்டிடத்தை 2 மாதத்துக்குள் இடிக்க வேண்டும். சுற்றுச்சூழல் தாக்கத்துக்காக ஓட்டல் நிர்வாகம் மாநில கடலோர ஒழுங்கு மண்டல ஆணையத்துக்கு ₹10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். கடற்கரையில் இருந்து 200 மீட்டர் முதல் 500 மீட்டர் தொலைவுக்குள் உள்ள கட்டிடத்துக்கு மாநில கடலோர ஒழுங்கு மண்டல ஆணையத்தில் ஓட்டல் நிர்வாகம் 3 மாதத்துக்குள் உரிய அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாத பட்சத்தில் அந்த கட்டிடத்தையும் இடிக்க வேண்டும். இந்த விதிமீறலை ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு வந்த மனுதாரருக்கு ஓட்டல் நிர்வாகம் ₹50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Related Stories: