நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி விவசாயிகள் சாலை மறியல்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம் காவனூர்புதுச்சேரி கிராமத்தில் ஆண்டுதோறும் அரசு சார்பில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படுவது வழக்கம். இந்த நெல் கொள்முதல் நிலையங்களில் காவனூர்புதுச்சேரி, காரியமங்கலம், நாஞ்சிபுரம், ஆழ்வராம்பூண்டி, தளவராம்பூண்டி, கம்மாளம்பூண்டி, சோழனூர், அத்தியூர், அகரம்தூளி, பாரதிபுரம், மேனல்லூர் உள்பட 18க்கு மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள், தங்களது விவசாய நிலத்தில் பயிரிடும் நெல்களை, அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் வழங்கி வந்தனர்.   இந்நிலையில் இந்தாண்டு காவனூர்புதுச்சேரி கிராமத்தில் அரசின் நெல் கொள்முதல் நிலையங்கள் துவங்கவில்லை. இதுகுறித்து விவசாயிகள் பல்வேறு அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் உத்திரமேரூர் - அச்சரப்பாக்கம் சாலை, காவனூர்புதுச்சேரி கூட்ரோட்டில் நேற்று காலை திரண்டனர். அங்கு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பரபரப்பு நிலவியது. தகவலறிந்து உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். விவசாயிகளின் திடீர் மறியலால், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: