அதியமான்கோட்டையில் அதிகாரிகள் நடவடிக்கை கோயில் விழாவில் அமைக்கப்பட்ட கடைகளை காலி செய்ய உத்தரவு

தர்மபுரி, ஏப்.10: கொரோனா புதிய கட்டுப்பாடு எதிரொலியாக அதியமான்கோட்டை காளியம்மன் கோயில் விழாவில் அமைத்துள்ள கடைகளை காலி செய்யக்கோரி தண்டோரா போடப்பட்டது.தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள பழமையான சுயம்பு காளியம்மன் கோயிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 12ம் தேதி கூழ் ஊற்றி, அம்மன் சக்தி கரகம் அழைத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து கும்பபூஜை, அம்மனுக்கு பால் அபிஷேகம், கோபூஜை, விநாயகர் தேர் இழுத்தல் மற்றும் காளியம்மன் சிறிய தேர் இழுத்தல் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக பெரிய தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். இருதினங்களுக்கு முன் பெரிய தேர் நிலை அடைதல் நிகழ்ச்சி நடந்தது. மஞ்சள் நீராட்டு விழா மற்றும் ஸ்ரீ அம்மன் ஊர்வலத்துடன் திருவிழா நிகழ்ச்சி நேற்று முன்தினம் முடிந்தது.

கோயில் விழாவையொட்டி ஒருமாதத்திற்கு விழாக்கால கடைகள் வைத்து வியாபாரம் செய்வார்கள், இனிப்பு, காரம், சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் 100க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வந்தன. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த, தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இந்த கட்டுப்பாட்டின் கீழ் நேற்று அதிகாரிகள் தண்டோரா போட்டு கடைகளை உடனே மூடும்படி எச்சரிக்கை செய்தனர். மீறி வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதையடுத்து வியாபாரிகள் கடைகளை மூடினர். சிலர் காலி செய்யும் பணியில் தீவிரமாக நேற்று இரவு ஈடுபட்டனர்.

Related Stories: