விசைத்தறி தொழில் முடங்கியதால் பிளாட்பாரத்தில் மனைவியுடன் தஞ்சமடைந்த தொழிலாளி மீட்பு

பள்ளிபாளையம்,ஏப்.10: பள்ளிபாளையத்தில், விசைத்தறி தொழில் முடங்கியதால், வருமானமின்றி மனைவியோடு பிளாட்பாரத்தில் தஞ்சமடைந்த தறி தொழிலாளியை மீட்ட சமூக நலத்துறையினர், ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தனர். பள்ளிபாளையம் பெரியகாடு பகுதியை சேர்ந்த  விசைத்தறி தொழிலாளி கருப்பண்ணன் (எ) வீரப்பன்(48). குழந்தைகள் ஏதும் இல்லை. மனைவி வாசுகி மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். வீரப்பனுக்கு கண்பார்வையும் குறைந்து போனது. கடந்த 6மாதமாக நூல்விலை உயர்வு காரணமாக விசைத்தறி கூடங்கள் இயங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வீரப்பனுக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் தங்கியிருந்த வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியவில்லை. இதையடுத்து வீட்டின் உரிமையாளர் அவர்களை வெளியேற்றினார். இதையடுத்து வீரப்பன், தனது மனைவியுடன் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை முன்புள்ள பிளாட்பாரத்தில் தஞ்சமடைந்தார். அங்கேயே சமைத்து சாப்பிட்டு தூங்கினார்.  வீரப்பன் குறித்து தினகரன் நாளிதழில் படத்துன் நேற்று செய்தி வெளியானது.  

இதையடுத்து மாவட்ட கலெக்டர் மெகராஜ்,  வீரப்பனுக்கு தேவையான உதவிகளை செய்ய சமூகநலத்துறைக்கு உத்தரவிட்டார். குமாரபாளையம் தன்னார்வ தொண்டு நிறுவனமான கம்பத்துக்காரர் பள்ளியின் தலைவர் விஜயகுமார், பள்ளிபாளையம் விஏஓ சாந்தகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து வீரப்பனை நேரில் சந்தித்து பேசினர்.

இதற்கிடையே தமிழ்நாடு விஎச்பி அமைப்பு மாவட்ட செயலாளர் சபரிநாதன், சமூக ஆர்வலர்களுடன் வீரப்பனை சந்தித்து, மாதம் ₹1200 வாடகையில் ஆவாரங்காட்டில் வீடு பார்த்து வாடகை மற்றும் செலவினங்களுக்கு உதவிகளை செய்தனர். இதையடுத்து பிளாட்பாரத்தில் இருந்த வீரப்பன் வீட்டு சாமான்கள் வாடகை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் வாசுகிக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கவும், வீரப்பனின் பார்வை குறைபாட்டிற்கு தேவையான சிகிச்சை அளிக்கவும்,  மீட்பு குழுவினர் தேவையான உதவிகளை செய்ய வேண்டி உள்ளதால், இருவரையும் மீட்ட குழுவினர், அவர்களை ராசிபுரம் அழைத்துச்சென்று அணைக்கும் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தனர்.  தறித்தொழிலாளிக்கு உடனடியாக உதவிகள் செய்ய உத்தரவிட்ட கலெக்டர் மெகராஜூக்கு சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories:

>