சேந்தமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில் கொள்ளை முயற்சி

சேந்தமங்கலம், ஏப்.10:நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பழனியப்பர் கோயிலில் மூன்று ஆடுகளை கொன்றுவிட்டு, கோயில் கொள்ளையடிக்க முயன்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த பேளுக்குறிச்சி கொல்லிமலை அடிவாரம் அருகே பிரசித்தி பெற்ற பழனியப்பர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் விசேஷ நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக தற்போது திருப்பணி நடந்து வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள விவசாயிகளின் ஆடுகள் பகலில், கொல்லிமலை வளத்தில் மேய்ந்துவிட்டு இரவு கோயில் வளாகத்தில் படுத்துக்கொள்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கோயிலில் புகுந்த மர்ம நபர்கள், கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளனர்.

அப்போது அங்கு இருந்த ஆடுகள் கத்தியதால், மர்ம ஆசாமிகள் மூன்று ஆடுகளையும் வெட்டி கொன்றுள்ளனர். பின்னர் அங்கிருந்த உண்டியலை கல்லைக் கொண்டு உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அலாரம் அடித்ததால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனிடையே சத்தம் கேட்டு அருகில் உள்ள தோட்டத்து வீடுகளில் தூங்கி கொண்டிருந்தவர்கள் எழுந்து வந்து பார்த்தனர். அப்போது ஆடுகளை கொன்றுவிட்டு, உண்டியலை மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்தது தெரியவந்தது.இதையடுத்து பேளுக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் வந்த போலீசார், கொல்லிமலை வாழவந்திநாடு காவல் எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் விசாரிக்க முடியாது என தெரிவித்தனர்.இதையடுத்து வாழவந்திநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியை உள்ளூர் திருடர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>