மாஸ்க் அணியாதவர்களுக்கு பொருட்கள் வழங்கக்கூடாது

நாமக்கல், ஏப்.10: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்,  வணிகர்கள் சங்க நிர்வாகிகளுடன் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், கலெக்டர் மெகராஜ் தலைமை வகித்து பேசியதாவது: பொதுமக்கள் அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். வெளியில் செல்லும்போது, கட்டாயம் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், அடிக்கடி கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்றிட வேண்டும்.

45 வயதிற்கு மேற்பட்டவர்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டாயமாக, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு இன்று (10ம் தேதி) முதல் தடை விதிக்கப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் ஹேட்டல்களில் பணிபுரியும் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொது மக்களின் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்படுதல், கை சுத்திகரிப்பான் உபயோகப்படுத்துதல், மாஸ்க் அணிதல் போன்றவற்றை சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றி, காய்கறி கடைகள், மளிகை கடைகள் உட்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள் அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி) ஒரு நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் மட்டும், இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.ஓட்டல்கள் மற்றும் டீக் கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 சதவீதம் இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் இரவு 11 மணி வரை அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படும். அனைத்து சினிமா தியேட்டர்களும் 50 சதவீதம் இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதிக்கப்படும். நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, திருமண நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமலும் மற்றும் இறுதி ஊர்வலங்களில் 50பேருக்கு மிகாமலும் கலந்து கொள்ள வேண்டும். கடை உரிமையாளர்கள் மாஸ்க் அணிந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே, பொருட்கள் வழங்க வேண்டும். 6 அடி சமூக இடைவெளி விட்டு வாடிக்கையாளர்கள் நிற்க அறிவுறுத்த வேண்டும். வணிகர் சங்க நிர்வாகிகள் இதற்கு முழுஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு கலெக்டர் மெகராஜ் தெரிவித்தார்.இந்த கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சித்ரா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் சோமசுந்தரம், பேரிடர் மேலாண்மை தனி தாசில்தார் பச்சைமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>